புதுடெல்லி: “டெல்லியின் மிகவும் நேர்மையற்ற நபர் அரவிந்த் கேஜ்ரிவால் தான்” என்று பாஜகவின் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை நேர்மையாளர் என்றும், பிற கட்சித் தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்றும் கூறி அக்கட்சி வெளியிட்டுள்ள போஸ்டருக்கு எதிராக அனுராக் இவ்வாறு சாடியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை அதன் எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. டெல்லி பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் போஸ்டரில் மேலே அரவிந்த் கேஜ்ரிவாலும், அவருக்கு கீழே பிறக் கட்சித் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், அரவிந்த் கேஜ்ரிவாலின் நேர்மை, மற்ற இந்த எல்லோரின் நேர்மையை விட மேலானது என்று இந்தி வாசகம் இடம்பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் போஸ்டரில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த பிற முக்கியத் தலைவர்களின் படங்களும் இடம்பிடித்துள்ளன.
பாஜக சாடல்: ஆம் ஆத்மியின் இந்த போஸ்டருக்கு பாஜகவின் அனுராக் தாக்குர் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் கூறுகையில், “எனது கேள்வி ஒன்றே ஒன்றுதான். டெல்லி முதல்வர் அதிஷி நேர்மையானவர் இல்லையா? அந்தப் போஸ்டரில் அவரின் படம் ஏன் இல்லை? கேஜ்ரிவால் பெண்களுக்கு எதிரானவர். அவர் எப்போதும் தன்னை மட்டுமே பார்க்கிறார். என்றாலும் மக்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். டெல்லியின் இளவரசராக தன்னைக் கருதும் அவர்தான் டெல்லியின் மிகப் பெரிய நேர்மையற்ற நபர்.
அவர் மதுபான ஊழலில் ஈடுபட்டார். அதனால்தான் நான் இதனைச் சொல்கிறேன். அவர்களின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் சிறை சென்றனர். அவர் தனது படத்தை வெட்கமின்றி போஸ்டரில் போட்டுக் கொள்கிறார். கம்பிகளுக்கு பின்னால் இருந்து கொண்டு ஆட்சி நடத்த விரும்பும் நபரைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சாடல்: ஆம் ஆத்மி கட்சியின் நேர்மையற்றவக போஸ்டரில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சந்தீப் தீக்ஷித் மற்றும் அஜய் மக்கான் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருப்பதை அக்கட்சியின் அல்கா லம்பா கண்டித்துள்ளார். கல்காஜி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான அவர், “நீங்கள் (அரவிந்த் கேஜ்ரிவால்) ஷீலா தீட்சித் மற்றும் மன்மோகன் சிங்கை அவமதித்தீர்கள். இப்போது ஒரு பேட்டியில், மன்மோகன் சிங்தான் மிகவும் நேர்மையான பிரதமர் என்று கூறுகிறீர்கள். நீங்கள் மன்மோகன் சிங் மனைவயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நீங்கள்தான் காங்கிரஸுடன் கூட்டணிக்காக கெஞ்சினீர்கள். மக்களவைத் தேர்தலின் போது 7 இடங்களுக்காக உங்களுடன் கூட்டணி வைத்து மிகப் பெரிய தவறை நாங்கள் செய்துவிட்டோம்.” என்று சாடியுள்ளார்.
டெல்லியின் 70 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் பிப்பரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முந்தைய கட்சிகள் மீண்டும் தலைநகரில் காலூன்றவும், பிந்தைய கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கவும் தீவிரம் காட்டுகின்றன.