ரஞ்சி கோப்பை: மும்பை அணியை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்

மும்பை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. இதில் தற்போது 6-வது கட்ட லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. அந்த வரிசையில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அடங்கிய மும்பை – ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 33.2 ஓவர்களில் 120 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 51 ரன்கள் அடிக்க, ஜம்மு-காஷ்மீர் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் நசிர் மிர், உத்விர் சிங் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 42 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது.

பரஸ் தோக்ரா 19 ரன்களுடனும், யுத்விர் சிங் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தர். மும்பை தரப்பில் மோகித் அவஸ்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜம்மு – காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 46.3 ஓவர்களில் 206 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷுபம் கஜுரியா 53 ரன்கள் அடித்தார்.மும்பை தரப்பில் மொகித் அவஸ்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ரோகித் சர்மா (28 ரன்கள்) மற்றும் ஜெய்ஸ்வால் (26 ரன்கள்) ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை அணி தடுமாறியது. குறிப்பாக முன்னணி வீரர்களான ரஹானே (16 ரன்), ஸ்ரேயாஸ் ஐயர் (17 ரன்), ஷிவம் துபே (0) ஆகியோர் தாக்குப்பிடிக்கவில்லை.

இந்த இக்கட்டான நிலையில் தனுஷ் கோட்டியான் – ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் சதமும், தனுஷ் கோட்டியான் அரைசதமும் அடித்தனர். 2-வது முடிவில் மும்பை அணி 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து 188 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஷர்துல் தாகூர் 113 ரன்களுடனும், தனுஷ் கோடியன் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் .இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது

தொடர்ந்து விளையாடிய மும்பை அணியின் ஷர்துல் தாகூர் 119 ரன்களிலும் , தனுஷ் கோடியன் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . இதனை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . இதனால் மும்பை அணி 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் 205 ரன்கள் ஜம்மு காஷ்மீர் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

ரஞ்சி கோப்பையின் நடப்பு சாம்பியன் மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது ஜம்மு காஷ்மீர். குரூப் ஏ பிரிவில் ஜம்மு காஷ்மீர் அணி முதலிடத்தில் உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.