சிவகங்கை: ‘வேங்கைவயல் விவகாரத்தில் நான் சிபிஐ விசாரணை கேட்டபோது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? ’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை பாஜக புதிய மாவட்டத் தலைவராக பாண்டித்துரை நியமிக்கப்பட்டார். அவரை அறிமுகம் செய்யும் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொது செயலாளர் ராமஸ்ரீநிவாசன், முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்த பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோருக்கும், காரணமாக இருந்த அண்ணாமலை மற்றும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
முதல்வர் தான் சொன்னதால் திட்டத்தை ரத்து செய்ததாக நினைத்து கொண்டிருக்கிறது. அவர் பிப்ரவரியில் ஏலம் விடும்போது எங்கே போனார். வேங்கைவயல் விவகாரத்தில் அன்றே சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஏன் திருமாவளவன் ஆதரவு தெரிவிக்கவில்லை. தற்போது கூறுகிறார். அவருக்கு உண்மை குற்றவாளி தெரிந்திருந்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாசுபடிந்த சார் யார்? என்று அன்றைக்கே கேள்வி எழுப்பினேன். ஆனால் தற்போது பல சார்கள் அந்த வழக்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதை மாநில அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். அந்த விவகாரத்தை ஈவேராவை காரணம் காட்டி மக்களின் கவனத்தை மடைமாற்ற வேண்டாம். ஈவேராவை முதலில் விமர்சனம் செய்தது நான் தான். அவரை சீமான் ஏதோ பொய்யா விமர்சனம் செய்ததாக கூறி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை திசை திருப்ப திமுக அரசு முயல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காரைக்குடியில் அவர் கூறியதாவது: அரசு பள்ளியில் மின் இணைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் இருந்துள்ளது. வகுப்பறையிலேயே கணினி ஆய்வகம் இருந்துள்ளது. இது அரசின் பொறுப்பற்றதனத்தை காட்டுகிறது. மேலும் இதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியே காரணம்.
கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. பள்ளியை கட்டுவது, ஆசிரியர்களை நியமிப்பது மாநில அரசு தான். பீர்கலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி முன்மாதிரி பள்ளியாக உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வில் விவசாய பிரிவுக்கு ஆசிரியர் இல்லை. இதனால் அந்த பிரிவையே மூடிவிட்டனர். எதற்கு மகேஸ்பொய்யாமொழி இருக்கிறார்.
உதயநிதிக்கு வால் பிடிப்பதை தவிர அவருக்கு வேறு வேலை இல்லை. அவரை முதல்வர் நீக்க வேண்டும். ஆனால் தலைமைஆசிரியர் மீது பழியை சுமத்தி அரசு தப்பித்து கொள்கிறது. விஷசாராயத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் தந்துவிட்டு, அரசு கவனக்குறைவால் இறந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கொடுக்கின்றனர். அதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அந்த குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.