2019-ல் கல்லூரியில் இசையை (லாஸ்லியா) துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் ஹானஸ்ட் ராஜ் (ஹரி பாஸ்கர்). ஆனால், அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நிராகரிக்கிறார் இசை. விரக்தியடையும் ஹானஸ்ட் ராஜ், மொத்தக் கல்லூரியின் முன்பும் “இன்னும் நான்கே ஆண்டுகளில் இசையை விட அழகான பெண்ணைக் காதலித்து, வாழ்க்கையிலும் வெற்றிபெற்றுக் காட்டுவேன்” எனச் சவால்விடுகிறார். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் இசையின் வீட்டிலேயே வேலைக்காரனாக இருப்பதாகவும் சபதம் எடுக்கிறார். அவர் ஜாலியாக இந்தச் சபதத்தை எடுத்தாலும், விதியின் விளையாட்டில் அவர் உண்மையிலேயே இசையின் வீட்டில் வேலைக்காரராகச் சேர நேரிடுகிறது. அதற்குப் பிறகு இருவருக்குமான உறவு என்னவானது என்பதுதான் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் ஒன்லைன்.
இந்தக் கதையை வைத்து பாய் பெஸ்டி, சிங்கிள்ஸ் சாபம், WWE ரெஃபரென்ஸ்கள் என லிஸ்ட் போட்டு, இணையத்தில் ‘Tag that 90s kid!’ என டிரெண்டாகும் அனைத்து விஷயங்களையும் மிக்ஸியில் அடித்து காமெடி+காதல்+கருத்து படம் ஒன்றை கொடுக்க முயன்றிக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன். ஆனால், இன்றைய காதல் குறித்தும், உறவுகள் குறித்துமான புரிதல் போதாமைகளே படம் முழுக்க வெளிப்படுகின்றன. ‘பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் விலகிவிடுங்கள்’ என வரவேற்கத்தக்க ஒரு மெசேஜ் வருகிறது என்றால் பின்னாடியே ‘காதல் என்றால்…’ என வாட்ஸ்அப் பார்வர்ட் மெசேஜூம் வருகிறது. இப்படியான முரண்கள் நிறைந்த படம்தான் இது.
ஜம்ப் கட்ஸ் மூலம் இணையத்தில் பிரபலமான ஹரிபாஸ்கர், வெள்ளித்திரையில் அறிமுகமாகும் படம். கதையின் தன்மைக்கு ஏற்ப காட்சிகளில் கலகலப்பு கூட்டினாலும் முழுப் படத்தையும் தனது தோள்களில் தாங்க வேண்டிய பொறுப்பில் தடுமாறுகிறார். ஆரம்ப காட்சிகளில் அவரது மிகை நடிப்பு நெருடல். லாஸ்லியா தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்திற்கு நியாயம் செய்ய அவரால் முடிந்ததை செய்கிறார். சராசரி காட்சிகளில் எந்த குறையும் இல்லையென்றாலும் ஆழமான காட்சிகளில் மிகவும் மேலோட்டமான நடிப்பையே கொடுத்திருக்கிறார். நண்பராக வரும் ஷாரா சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஆனால், தொடர்ந்து ஒரே மாதிரியான ரோல்களில் அவரை பார்ப்பதும் அலுப்பைத் தருகிறது. க்ளிஷேவாக எழுதப்பட்டிருந்தாலும், கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்திப்போகிறார் ‘பிக் பாஸ்’ ரயான். இவர்களுக்கு நடுவில் சீனியராக இளவரசு, பொறுப்புடன் தனது கடமையை முடித்துவிட்டு சென்றிருக்கிறார்.
குளோத்துங்க வர்மனின் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய பலம். ராமசுப்புவின் படத்தொகுப்பு கதையின் வேகத்தை சீராக வைத்திருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் காட்சிகள் இயல்பாக நகர்கின்றன. ஆனால், முதல் பாதியில் இன்னும் ‘கட்’ ஆப்ஷனுக்கு அதிகம் வேலை கொடுத்திருக்கலாம். ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்கள் தனித்துத் தெரியாவிட்டாலும், படத்தின் போக்கைக் கெடுக்காமல் திரைக்கதையுடன் இயைந்து வருவது சிறப்பு. ஆனால், பின்னணி இசையில் படத்திற்குத் தேவையான புதுமை மிஸ்ஸிங். உணர்ச்சிகரமான காட்சிகளில் ஒரே மியூசிக்கை லூப்பில் ஓட விடுவதும் அலுப்பு.
இன்றைய காலகட்டத்தை எடுத்துக்காட்டும் படமாக முன்வைக்கப்பட்டாலும், படத்தின் கருத்துக்கள் அனைத்தும் இரு தசாப்தத்துக்கு முன்பான மனநிலையை தாண்டாததாக இருப்பது முக்கிய பலவீனம். திரைக்கதையில் வரும் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுமே எளிதில் யூகிக்கக்கூடியதாகவே இருக்கிறது. இரட்டை அர்த்த காமெடிகள், நவீனயுக காதல் பற்றிய புரிதலற்ற அணுகுமுறை என நெகட்டிவ்கள் படத்தின் சில பாசிட்டிவ்களையும் மறக்கடிக்க வைத்துவிடுகின்றன. அதிலும் இறுதிக்கட்டத்தில் கதாபாத்திரங்கள் மனம் மாறுவதாக வரும் காட்சிகளெல்லாம்… உஷ்ஷ்ஷ்ஷ்ஷ், ஆள விடுங்க ப்ரோ!
அவ்வப்போது சிரிக்கவைத்தாலும் `மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ நம் மனங்களை ஸ்வீப் செய்யத் தவறுகிறார்!