Pa Ranjith : `யாரைக் காப்பாற்ற யாரை பலி கொடுப்பது?' – வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இதில் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய நீண்டகாலம் ஆனதால் காவல்துறை மீதும் தமிழக அரசு மீதும் பல விமர்சனங்கள் எழுந்தன. இறுதியாக இந்த வழக்கில் விசாரணையை முடித்து கடந்த 20ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்றுபேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பட்டியலின நபர்கள் மீதே குற்றம்சுமத்தப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் “யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?!” எனக் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Pa.Ranjith அறிக்கை

தமிழக அரசே வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்று அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்திடுக!!

Pa.Ranjith அறிக்கை, page 1
Pa.Ranjith அறிக்கை, page 2
Pa.Ranjith அறிக்கை, page 3
Pa.Ranjith அறிக்கை, page 4

வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரகதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.

வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை. இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது.

வேங்கை வயல்

உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.