2022ம் ஆண்டு பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறைசாலையில் கடந்த வியாழன் அன்று உயிரிழந்துள்ளார்.
பாபு என அடையாளம் காணப்படும் அந்த நபர் தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்துவிட்டு பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னை விடுதலை செய்வதற்காகக் காத்திருந்த நிலையில், மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இதேபோல சிக்கிக்கொண்டு, தண்டனைக்காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் மரணத்துக்கு முன்பு வீடு திரும்பிவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் 180 இந்திய மீனவர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் சிறைகளில் மரணமடையும் எட்டாவது இந்தியர் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகளாக இருக்கும் மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என இந்திய அரசு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், தண்டனைக் காலம் முடிந்தவர்களைக் கூட பாகிஸ்தான் திருப்பி அனுப்பாதது சர்வதேச அரசியல் நோக்கர்களைப் புருவமுயர்த்தச் செய்கிறது.
கைது செய்யப்பட்ட பெரும்பாலான மீனவர்கள் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளிலிருந்து மீன் பிடிக்க சென்றவர்கள். சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Pakistan சிறைகளில் இந்திய மீனவர்கள்!
கடந்த ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் சிறைகளில் 209 இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கின்றது.
இவர்களில் 2021 முதல் சிறையில் இருப்பவர்கள் 51 பேர். 2022 முதல் இருப்பவர்கள் 130 பேர். 2023ல் 9 பேரும் 2024ல் 19 பேரும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மீனவர்களில் 134 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 24 பேர் சாமன் டையூ, 18 பேர் மகாராஷ்டிரா, 17 பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தலா 7 பேர். பீகார், ஒடிஷாவைச் சேர்ந்தவர்கள் தலா 1 நபர்கள்.
இந்திய அரசின் நடவடிக்கையால் 2014 முதல் 2639 மீனவர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.