சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், முன்னாள் ஆளுநர் தமிழிசை, அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார், பாலகங்கா, தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை, ஹெச்.ராஜா, ஆர்.சரத்குமார், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ் மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக சேவை, சுற்றுச்சூழல் பிரிவில் ஆளுநர் விருதுக்கு தேர்வானோருக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை ஆளுநர் வழங்கினார். மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கும் ஆளுநர் பரிசு வழங்கினார். கொடிநாள் நிதிவசூலித்த சென்னை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களுக்கும், கோவை மாநகராட்சிக்கும் சுழற்கோப்பைகளை வழங்கினார்.
தேநீர் விருந்து நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. பாமக, தவெக, ஓபிஎஸ் தரப்பிலும் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.