38th National Games 2025: 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி 28ஆம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் மொத்தம் 11 மையங்களில் இந்த தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற உள்ளன. 38வது தேசிய விளையாட்டு போட்டியில் 31 பிரிவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மொத்தம் 393 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் 102 அதிகாரிகள் கொண்ட குழு என மொத்தம் 495 பேர் உத்தரகாண்ட் செல்கிறார்கள்.
இந்நிலையில், அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜன. 26) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ், அதன் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன், SDAT பொது மேலாளர் சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர். மேலும், 38வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகளை அவகர்கள் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து வீரர்களுக்கான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
38வது தேசிய விளையாட்டு போட்டி: ‘தங்கம் மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்’
இந்நிகழ்வில் பேசிய ஐசரி கணேஷ்,”குஜராத் மாநிலத்தில் நடந்த போட்டியில் ஐந்தாம் இடம் பெற்றோம். அதற்கு அடுத்து கோவாவில் நடைபெற்ற போட்டியில் 10ஆம் இடத்தை தமிழகம் பெற்றது. ஒலிம்பிக்கில் இடம்பெறாத போட்டிகள் அங்கு இடம்பெற்றதே அதற்கு காரணம். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களுக்குள் தமிழ்நாடு வரவேண்டும்.
வீரர்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டு விளையாட வேண்டும். வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தற்போது வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். எனவே வீரர்கள் தங்கம் வெல்வதை மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்” என்றார்.
38வது தேசிய விளையாட்டு போட்டி: ‘3% இடஒதுக்கீடு வீரர்களுக்கு உதவும்’
தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜுனா,”இந்தாண்டு தமிழகத்தின் சார்பில் 393 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 102 பேர் என மொத்தம் 495 பேர் தமிழகத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் நாங்கள் செய்து தருவோம். விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே வீரர்கள் பதக்கம் வெல்லும்போது, அவர்களுக்கு அரசுத் துறையில் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைகள் வழங்கப்படும். இதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
தமிழகம் 3வது இடம்பிடிக்கும் – ஐசரி கணேஷ் நம்பிக்கை
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ்,”உத்தரகாண்ட் நடைபெற உள்ள இந்த போட்டியில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழக துணை முதல்வரே விளையாட்டு துறைக்கு அமைச்சராக இருப்பதால் தமிழக அரசு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
பஞ்சாப் சம்பவம் – ஆதவ் அர்ஜுனா கோரிக்கை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா,”இந்த ஆண்டு முதல் ஐந்து இடத்திற்குள் தமிழகம் இடம்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 3% விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும். இந்த ஆண்டும் அதிகளவிலான புதிய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
மத்திய அரசிடமும், தமிழக அரசிடமும் பேசி உள்ளோம். வரும் ஆண்டில் தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டியை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். வீரர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அந்த மாநில காவல் துறையுடன் தமிழக காவல்துறை பேச வேண்டும். இனிவரும் காலங்களில் வீரர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்” என கூறினார்.