டேராடூன்: உத்தராகண்ட் உள்ளாட்சி தேர்தலில் 11 மேயர் பதவிக்கான இடங்களில் 10-ல் பாஜக வெற்றி பெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் 11 மாநகராட்சிகள், 43 நகராட்சிகள், 46 நகர பஞ்சாயத்துக்களுக்கு கடந்த வியாழக் கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாயின.
11 மேயர் பதவிக்கான இடங்களில் 10-ல் பாஜக வெற்றி பெற்றது. பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகரில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் ஆர்த்தி பண்டாரி வெற்றி பெற்றார்.
மேயர் தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தடையடுத்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில், ‘‘ வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். திறமையான மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் பகுதியில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்தி முடித்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு நன்றி’’ என்றார்.
உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சீட்டு மூலம் நடைபெற்றதால் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.