புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள கோயில்களை நிர்வாகிக்க சனாதன வாரியம் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர். அகில இந்திய அகாடாக்கள் பரிஷத்தின்(ஏஐஏபி) இந்த கோரிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வஃக்பு வாரியம் மீதான சட்ட திருத்த மசோதா கடந்த வருடம் அறிமுகமானது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து வஃக்பு வாரியம் போல், சனாதன வாரியம் அனைத்து மாநிலங்களிலும் அல்லது தேசிய அளவில் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இந்த கோரிக்கை வலுவடைந்துள்ளது. இதன் மீது நாளை ஜனவரி 27 இல் ஏஐஏபியினர் கூடி ஆலோசனை செய்து முடிவு எடுக்க உள்ளனர். இந்த சனாதன வாரியத்திற்கு இந்துத்துவா அமைப்பான விஹெச்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏஐஏபியின் தலைவரான மஹந்த் ரவீந்திரா கிரி கூறும்போது, “ஜனவரி 27 இல் துறவிகளின் கூட்டத்தை ’சனாதனத்தின் மகா கும்பமேளா’ என நடத்த உள்ளோம். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. பிரதமர் மோடியும், உபி முதல்வர் யோகியும் இந்து பக்தர்களாக இருப்பதால் அவர்களிடம் சனாதன வாரியம் அமைக்கக் கோர உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ஏஐஏபியின் இந்த யோசனைக்கு பாஜகவின் தோழமை அமைப்பான விஹெச்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உள்ள முறைப்படி கோயில்களின் நிர்வாகக் குழுக்களே போதுமானவை என விஹெச்பி கருதுகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள அரசு அறக்கட்டளை முறையை ரத்து செய்யவும் வலியுறுத்தி உள்ளனர். இதற்காகப் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விஹெச்பியின் தேசியத் தலைவரான அலோக் குமார் கூறுகையில், “சனாதன வாரியத்திற்கு ஏஐஏபியினர் எங்களிடம் ஆதரவு கேட்டிருந்தனர். ஆனால், இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் நாங்கள் மறுத்து விட்டோம். இந்த விஷயத்தில் எங்களது பார்வை வேறு. நம் நாட்டில் வஃக்பு வாரியமும், சனாதன வாரியமும் தேவை இல்லை. கோயில்களை எந்த அரசும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே எங்கள் கொள்கை ஆகும்” எனத் தெரிவித்தார்.
துறவியான உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரின் கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் உள்ளார். இவருக்கு ஏஐஏபியின் பல அகாடாக்கள் நெருக்கமானவர்கள் எனக் கருதப்படுகிறது. எனவே, முதல்வர் யோகியின் யோசனையின்படியே இந்த கோரிக்கையை ஏஐஏபியினர் முன்வைப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. இதற்கு பொதுமக்களின் ஆதரவு கிடைப்பதை பொறுத்து இறுதி முடிவுகளை அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதகமான சூழல் உருவானால், பாஜக ஆளும் மாநிலங்களான உபி மற்றும் உத்தராகண்டில் சனாதான வாரியங்கள் அமையும் வாய்ப்புகள் உள்ளன.