புதுடெல்லி: 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி, பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்காக கடமைப் பாதைக்கு வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றினார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினர். அப்போது, 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இதையடுத்து ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் குழுக்களாக அணிவகுத்து வந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் ராணுவ வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு நவீன ரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
இதையடுத்து, பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்கள் நடைபெற்றன.
முன்னதாக, குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார். ராணுவ அதிகாரிகள் பலரும் மரியாதையுடன் வணக்கம் செலுத்தினர். இதனையடுத்து, இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.