டெல்லி குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? – விரிவான பதிவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 76-வது குடியரசு தினவிழாவில் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியமும், ராணுவ வலிமையும் கட்சிப்படுத்தப்பட்டன. அங்கு நடந்த விழாவில், மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்களின் 31 அலங்கார ஊர்திகள், பாதுகாப்புப்படைகளின் பிரம்மிக்க வைக்கும் ஒருங்கிணைந்த அணிவகுப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

76வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்காக கடமைப் பாதைக்கு வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றினார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினர். அப்போது, 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

இதையடுத்து ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் குழுக்களாக அணிவகுத்து வந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் ராணுவ வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு நவீன ரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்கள் நடைபெற்றன.

இன்றைய குடியசு தினவிழாவின் சிறப்பம்சங்கள்:

மலர் தூவிய எம்ஐ – 17 ஹெலிகாப்டர்கள்: இன்றைய குடியரசு தின அணிவகுப்பு, க்ரூப் கேப்டன் அலோக் அஹ்லாவாட் தலைமையில் எம்ஐ – 17 ஹெலிகாப்டர்கள் திவாஜ் அமைப்பில் அணிவகுத்து மலர்கள் தூவியதில் இருந்து தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முதல் முறையாக: டெல்லி கடமைப் பாதையில் முதல் முறையாக முப்படைகளின் அலங்கார வாகனம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியா என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அந்த ஊர்தியில், இந்தியாவின் முப்படைகளுக்கு இடையே நெட் ஒர்க்கிங் மற்றும் தகவல்தொடர்புக்கு உதவும் ‘கூட்டு செயல்பாட்டு அறை’ அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 5000 கலைஞர்கள் பங்கேற்ற 45 நடன வடிவங்கள் அடங்கிய 11 நிமிட கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. ஜெயதி ஜெய மமஹே பாரதம் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வு முதல் முறையாக விஜய் சவுக் முதல் சி ஹெக்ஸாகன் வரையிலான முழு கடமைப்பாதையில் ஒரே நேரத்தில் நடந்தது.

மகளிர் சிஆர்பிஎஃப் படை: கடமைப் பாதையில் அணிவகுத்த பாதுகாப்பு படையினரில், 148 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே அடங்கிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் ஒன்று. இதற்கு உதவி கமாண்டன்ட் ஐஸ்வரியா ஜாய்.எம் தலைமை தாங்கினார். இரண்டாவது முறையாக டெல்லி போலீஸ் இசைக் குழு, பேண்ட் மாஸ்டர் ருயாங்குனுவோ தலைமையில் முழுவதும் பெண்கள் அடங்கிய பேண்ட் குழுவை அமைத்திருந்தது.

டெல்லியில் அணிவகுத்த இந்தோனேசிய படை: இந்தக் குடியரசு தின விழாவில், இந்தோனேசியாவின் தேசிய ராணுவப் படை மற்றும் இந்தோனேசிய ராணுவ அகாடமியின் ராணுவ இசைக்குழுவும் டெல்லி கடமைப் பாதையில் அணிவகுத்துச் சென்றன. இதில் அணி வகுப்பு குழுவில் 152 பேரும், இசைக்குழுவில் 190 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

முன்னாள் படைவீரர்களின் அலங்கார ஊர்தி: இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பின் மற்றொரு சிறப்பம்சமாக இந்தியாவின் படைவீரர்களின் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘எப்போதும் வளர்ந்த இந்தியாவை நோக்கி’ என்ற கருப்பொருளில் முன்னாள் ராணுவ வீரர்களின் அலங்கார ஊர்தி நடைபெற்றது.

காட்சிப்படுத்தப்பட்ட ஏவுகணைகள்: இந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில், பிரமோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் ஆகாஷ் வான்பாதுகாப்பு அமைப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல், ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பு, சஞ்சய் மற்றும் டிஆர்டிஒ- வின் பிராலே ஏவுகணையும் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.

உலகில் தற்போது இருக்கும் ஒரே குதிரைப் படை பிரிவான 61-வது குதிரைப்படை பிரிவு பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பினை வழிநடத்தியது. மூன்று ராணுவ சேவைகளின் மூத்த பெண் அதிகாரிகள் பெண் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

31 அலங்கார ஊர்திகள்: டெல்லி கடமைப் பாதையில் நடந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 10 மத்திய அமைச்சரவை மற்றும் துறைகளின் அலங்கார ஊர்திகள் ‘தங்க இந்தியா: பாரம்பரியம் மற்றும் மேம்பாடு’ என்ற தலைப்பின் கீழ் அணிவகுத்தன.

இதில் கோவா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் இடம்பெற்றன. உத்தரப்பிரதேசத்தின் அலங்கார ஊர்தியில் மகா கும்பமேளா இடம் பெற்றிருந்தது என்றாலும் மத்தியப் பிரதேசத்தின் வாகனத்தில் சிவிங்கிப் புலி இந்தியா திரும்பியது இடம்பெற்றிருந்தது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 70 கம்பெனி துணை ராணுவப்படைகள், 70,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்வுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.

தேசிய தலைநகரில் ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதில், முகத்தினை உணரும் 2,500 சிசிடிவி கேமிராக்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு போன்றவை அடங்கி இருந்தன. 200 கட்டிடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.