சென்னை: தமிழகத்தில் வளர்ச்சியானது சரிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின உரையில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட நேற்று குடியரசுத் தின உரையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் குடியரசுத் தின நல்வாழ்த்துக்கள். நமக்கு சுதந்திரம் பெற்றுதந்த அனைத்து தியாகிகள், போராளிகளை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். தற்போது இந்தியாவின் பொற்காலம். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நாம் உலகின் 5 இடங்களுக்குள் முன்னேறி உள்ளோம்.
இதற்கிடையே 2047-ம் ஆண்டுக்குள்ளாக வளர்ந்த நாடாக மாற்றுவதில் தமிழகத்துக்கு பெரிய பங்களிப்புள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது மாநிலம் சரிவுப்பாதையில் செல்கிறது. மொத்த மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல்-வெளிப்பாட்டில் பின்தங்கியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம் மாணவர்களால் 2-ம் வகுப்பு பாடநூல்களை கூட சரிவர படிக்க இயலவில்லை. இரண்டு இலக்க எண்களைக் கூட அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. அங்கு பெரும்பாலும் ஏழைகள் படிப்பதால் கற்றலில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு அவர்களின் எதிர்காலத்தை மேலும் கேள்விகுறியாக்கும். உயர் கல்வியிலும்கூட நிலைமை சிறப்பாக இல்லை. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக்கூட தரமுடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநில அரசிடம் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு நிதிப்பங்கீடு கிடைக்கப் பெறவில்லை. இதன் விளைவாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் 50 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளனர்.
மாநில அரசின் உயர்கல்விக் குழு தயாரித்த தரமற்ற பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அற்ப காரணங்களுக்காக துணைவேந்தர் நியமனத்தை நடக்க இயலாமல் செய்வது பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைக்கும் செயலாகும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முனைவர்களில் 5 சதவீதம் பேரால் கூட நெட், ஜேஆர்எப் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. மேலும், கல்வி நிறுவனங்களைச் சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமான கவலையை அளிக்கிறது.
இதுதவிர பட்டியலினத்தவர்களுக்கு இழைக்கப்படும் சமூகப்பாகுபாடுகள் பற்றிய செய்திகளை, படிக்கும்போது மனம் வருந்துகிறது. தங்கள் காலணிகளை அணிந்து கொண்டு கிராமங்களில் நடக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளி வகுப்பறைகளில் பட்டியலின மாணவர்கள் தனிப்படுத்தப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கள்ளச்சாராய பெருந்துயர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 100 பேர் இறந்தனர்,
முதலீட்டாளர்கள் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 2023-24-ல் நமது மாநிலம் 6-வது நிலைக்கு வீழ்ச்சி கண்டதோடு, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டையே பெற்றது. நாட்டிலேயே அதிக தற்கொலை விகிதம் உடைய மாநிலமாக தமிழகம் உள்ளது. சுமார் 20,000 பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்கிறார்கள்.
பொய்யான பரப்புரை: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளின் அலகுகளை தேசிய புலனாய்வு முகமை அவ்வப்போது கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் சமுதாயத்தை பிளவுபடுத்தி சிதைக்க முயற்சி செய்கிறார்கள். நமது அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துரைகளை பரப்புகிறார்கள். இதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.