புதுக்கோட்டை: திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், வழக்கில் மெத்தனம் காட்டியதாக திருமயம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள துளையானூர் சட்ட விரோத கல் குவாரி குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றி கொல்லப்பட்டார். இது தொடர்பாக கல் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரணையை அண்மையில் சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. விசாரணை அலுவலராக சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக திருமயம் போலீஸாரால் திரட்டப்பட்ட ஆவணங்கள் சிபிசிஐடி வசம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி இளங்கோவன் ஜென்னிங்ஸ் தலைமையில், ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டதுடன், அவரது வீட்டுக்குச் சென்று மனைவி மரியம் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மெத்தனம் காட்டியதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி டிஐஜி வருண்குமார் நேற்று உத்தரவிட்டார்.