புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தலைநகர் டெல்லியில் இன்று 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி பறக்கவிடுவார்.
இதன்பிறகு நாட்டின் ராணுவ வலிமை, கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் டெல்லி கடமைப் பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதையொட்டி டெல்லி கடமை பாதையில் 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லி காவல் துறையை சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட போலீஸாரும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 70 கம்பெனி வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி காவல் துறை மூத்த அதிகாரி தேவேஷ் குமார் கூறியதாவது: குடியரசு தின விழா நடைபெறும் கடமை பாதை வளாகத்தில் விவிஐபிக்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் அமர சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சுமார் ஒரு லட்சம் பேர் அணிவகுப்பு காண கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 20 மீட்டர் தொலைவில் ஒரு காவலர் பணியில் இருப்பார்கள். கடமை பாதை வளாகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் 500 கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும்.
பழைய குற்றவாளிகள், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும். டெல்லியின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு உள்ளன. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தேவேஷ் குமார் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் குடியரசு தின விழா ஏற்பாடுகள் களை கட்டி உள்ளது. ஜம்முவில் உள்ள மவுலான ஆசாத் மைதானத்தில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தேசிய பறக்க விடுவார். இதில் முதல்வர் உமர் அப்துல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க காஷ்மீர் எல்லைப் பகுதி, ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உட்பட நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.