புதுடெல்லி: கடந்த 2019-ல் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய இரண்டு தலைமறைவு குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை சனிக்கிழமை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் கொலையில் ஈடுபட்டதாகவும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் என்ஐஏவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மஜீத் மற்றும் ஹமீது இருவரும், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி, திருபுவனத்தில் உள்ள பெரியபள்ளி மசூதி அருகே மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, வகுப்புவாத வெறுப்பினை பரப்பும் நோக்கத்துடன் ராமலிங்கத்தினை கைகளை வெட்ட சதி செய்திருந்தாக என்ஐஏவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைவராக இருந்த ராமலிங்கம், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தப் பகுதியில் நடந்த மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணையை 2019, மார்ச் மாதத்தில் தமிழக போலீஸாரிடமிருந்து தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து 2019ம் ஆகஸ்ட்டில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் சென்னையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் 18 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த 18 பேரில் ஆறு பேர் தலைமறைவாகியிருந்தனர். அவர்களைப் பற்றித் தகவல் அளிப்பவர்களுக்கு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமறைவானவர்கள் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, கடந்த 2021ல் என்ஐஏ ஆறு தலைமறைவு குற்றவாளிகளில் ரஹ்மான் சாதிக் என்பவரைக் கைது செய்தது. 2024 நவம்பரில் திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறைக்கு அருகே அப்துல் மஜீத் மற்றும் ஷாஹுல் ஹமீது ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. மேலும் வழக்கில் 19-வது குற்றவாளியாக அடையாளம் காணப்படும் முகம்மது அலி ஜின்னா என்பவரை கைது செய்தது. அவர் பின்பு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
மஜீத் மற்றும் ஹமீது இருவரும் மீண்டும் தப்பிச் சென்ற நிலையில் என்ஐஏவால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை கைது செய்யும் வகையில் விசாரணை தொடர்ந்து வருகிறது.