சென்னை: இதய அறுவை சிகிச்சையில் உலக அளவில் அறியப்பட்ட டாக்டர் கே.எம்.செரியனின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியன், குழந்தைகள் இதய அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழ்ந்தார்.
இந்தியாவில் யாருமே செய்யாத அரிய சாதனையாக ஏற்கெனவே மூளைச் சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு வெற்றிகரமாக பொருத்தி அறுவை சிகிச்சை செய்து காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கதது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், “நமது நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கே.எம்.செரியனின் மறைவு வேதனை அளிக்கிறது. இதயவியல் மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். அது பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் உதவும்.
புதிய தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் எப்போதும் தனித்து நிற்கும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் உள்ளன” என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், “ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும், இதய அறுவை சிகிச்சையில் உலக அளவில் அறியப்பட்டவருமான டாக்டர் கே.எம். செரியனின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இதய சிகிச்சையில் அவரது முன்னோடியான பணிகள் எண்ணற்றோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதுடன், மருத்துவத் துறையில் பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளன.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கும் அவரது அன்புக்குரியார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பங்களிப்புகள் மருத்துவத்துறையில் சிறப்பான பணிகளுக்குத் தொடர்ந்து தூண்டுகோலாக அமையும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மருத்துவத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி, தமது சேவையின் மூலம் பெரும் புகழை ஈட்டிய டாக்டர் கே.எம். செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது.
தொடக்கத்தில் சென்னை ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய அவர், பிறகு தனியார் மருத்துவமனைகளில் மிகச் சிறப்பாக பணியாற்றினார். நாட்டிலேயே முதல் இதய அறுவை சிகிச்சையை செய்த பெருமை இவருக்கு உண்டு. டாக்டர் கே. எம். செரியன் மறைவு மருத்துவத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த பெருமைக்குரிய மருத்துவர் கே.எம். செரியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
இதய அறுவை சிகிச்சை துறையில் வியக்கத்தக்க சாதனைகள் பல புரிந்த மருத்துவர் கே.எம்.செரியனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக மருத்துவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்