டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நாளை (ஜன.27) முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
கடந்த 2002 உத்தராகண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன் அடிப்படையில் புஷ்கர் சிங் சாமி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில் இந்த சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து உத்தராகண்ட் முதல்வரின் செயலாளர் சைலேஷ் பகோலி நேற்று கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தராகண்ட் வருகிறார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. பொது சிவில் சட்ட இணையதளம் 27-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதனை தொடங்கி வைக்கிறார். நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெற உள்ளது” என்றார்