பாட்னா,
காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், சில சமயங்களில் உணவுக்காக ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது பல்வேறு பகுதிகளில் கானப்படக்கூடிய ஒன்றாகும். ஆனால், ஊருக்குள் புகுந்த குரங்குகள், சிறுமியை மாடியில் இருந்து தள்ளியது, அச்சிறுமி உயிரிழந்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகாரின் சிவான் மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர், தனது வீட்டின் மாடியில் இருந்து படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்துகொண்டு இருந்த குரங்கு கூட்டம், திடீரென சிறுமி இருக்கும் பகுதிக்கு வந்தது. குரங்கு கூட்டத்தை கண்டு பதற்றமடைந்த சிறுமி, அவற்றிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டின் மாடியில் அங்கும், இங்குமாக ஒடியுள்ளார்.
இதனை கண்ட சிறுமியின் உறவினர்கள், மாடிப்படி வழியாக கீழே இறங்குமாறு சிறுமியிடம் கூறினர். சிறுமி கீழே இறங்க முயற்சி செய்தபோது, ஒரு குரங்கு திடீரென சிறுமியை தள்ளிவிட்டது. இதனால் சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த சிறுமியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
குரங்கு தள்ளிவிட்டதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் நகர்ப்புற பகுதிகளில் குரங்குகள் தொந்தரவுகள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், குரங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளூர் மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, சிறுமியின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.