மலையாளத்தில் பல காமெடி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஷஃபி நேற்று நள்ளிரவு காலமாகி உள்ளார். இவர் தமிழில் விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன் ஆகியோர் நடித்த ‘மஜா’ படத்தை இயக்கியவர் ஆவார்.
இவருக்கு தற்போது 56 வயது ஆகும். கடந்த 16-ம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால், சிகிச்சைகள் இவருக்கு பலனளிக்கவில்லை. இதனால், நேற்று நள்ளிரவு காலமாகி உள்ளார்.

இவரது மறைவு செய்தியை மலையாள நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் தனது பேஸ்புக் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.
10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர், ஒரே ஒரு வேற்று மொழி படத்தை இயக்கி உள்ளார். அது தான் தமிழில் வெளியாகிய ‘மஜா’ திரைப்படம்.
உதவி இயக்குநராக தனது கரியரை தொடங்கிய இவர், 2001-ம் ஆண்டு முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். இவரது படங்களில் காமெடிகள் தான் பெரிய ஹைலைட்டே.
இவரது உடல் தற்போது அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.