மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்’ படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. படக்குழு உட்பட மம்முட்டி, இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, “நான் மோகன் லால் சார் படத்தின் விழாவில் இருப்பது எனக்கு சர்ரியல் மொமன்ட்தான். நான் அவருடைய படங்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னைப் போலவே இங்கு பலரும் அவருடைய சினிமாக்களை வியந்துப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறோம். அவரைத் தொடர்ந்து பார்க்கும் நமக்கு வயதாகிக்கொண்டே செல்கிறது. அவர் இன்னும் இளமையாகிக் கொண்டே போகிறார். மலையாள சினிமாவின் இத்தனை ஆளுமைகள் பங்குபெறும் விழாவில் நான் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் ஒன்றுபட்ட வரலாறுகள் இருக்கின்றன. இரண்டும் ஒன்றாகத்தான் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ப்ரித்விராஜ் என்னைப் பற்றிய உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி. நான் அந்த வார்த்தைகளுக்குத் தகுதியானவனா என்பது தெரியவில்லை. அதற்கு தகுதியுடைவனாக நான் மாறுவதற்கு முயற்சி செய்கிறேன். உங்களுடைய கடின உழைப்பு அத்தனையும் டீசரில் வெளிப்பட்டிருக்கிறது. லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படம். மலையாளத்தில் மட்டுமல்ல அத்தனை பகுதிகளிலும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, மற்ற மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. இப்போது இந்த இரண்டாம் பாகத்துக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த மேடையில் பத்ம பூஷன் அஜித் சார் பற்றி பேச வேண்டும். அஜித் சார் கைகொடுத்து தூக்கிவிட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் எனச் செல்லிக் கொள்வதில் பெருமைகொள்கிறேன். ” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.