இரண்டாவது தேனிலவு… தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் – மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டோம். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள்.
”திருமணமான புதுதில் கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். ‘காலையில் எழுந்தோம்; காப்பிக் குடித்தோம்; சமைத்தோம் சாப்பிட்டோம்; வீட்டுவேலை பார்த்தோம்’ என்று இருந்தால், பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாது. தேனிலவு என்று சில நாள்கள் வெளியே செல்லும்போது, வேலைப்பளு இல்லாதது, அருகருகே அமர்ந்து பயணம் செய்வது, பேசுவது, கூடவே ஒருவரையொருவர் உடலாகவும் மனமாகவும் தெரிந்துகொள்வது என்று தாம்பத்தியத்தை இறுக்கமாக்கும் பல அனுபவங்கள் நிகழும். அந்தக் காலத்தில் எப்போது தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், குழந்தைப் பிறக்கும் என்பது தெரியாது. அதனால், நிலவு வளர்கிற காலத்தில் தேனெல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியமான உடலுடன் தம்பதியர் இணைந்தால், குழந்தைப் பிறக்கும் என்று சில தினங்களைக் கடைப்பிடித்தார்கள். அதுதான் தேனிலவு. இந்தக் காலத்தில், எந்தெந்த நாள்களில் இணைந்தால் குழந்தைப் பிறக்கும் என்று தெரிந்திருந்தாலும்கூட, பரஸ்பரம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள தேனிலவுதான் உதவி செய்யும்.”
”முதலில் செவன் இயர் இட்ச் என்றால் என்ன என்று சொல்லி விடுகிறேன். பொதுவாக செவன் இயர் இட்ச் திருமணமான 6 அல்லது 7-வது வருடத்தில் வரும் என்று சொல்லப்பட்டாலும், இந்த உணர்வு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் உண்மை. இதுவொரு மன அழுத்தம் மாதிரியான உணர்வு. இது இரண்டு பேரில் யாருக்கு வேண்டுமானால் வரலாம். மனைவிக்கு, ‘தன்னுடைய திறமைகள் எதையுமே கணவன் பாராட்டவில்லை; நான் ஏதோ வேலைக்காரி மாதிரி இந்த வீட்டில் வேலைப்பார்த்துக்கிட்டிருக்கேன். என் உழைப்பை இவர் அனுபவிக்கிறார்’ என்று கோபம் வரும்.
கணவனுக்கு, ‘வெளியுலகத்தில் இருக்கிற பெண்கள் தன்னை எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள். தன்னுடைய திறமையைப் பார்த்து எப்படிப் பயப்படுகிறார்கள். ஆனால், என் மனைவி மட்டும் என்னையும் மதிப்பதில்லை, என் பெற்றோரையும் மதிப்பதில்லை. வீட்டுக்கு வந்தால் ஒரு அழுக்கு நைட்டி போட்டுக்கொண்டிருக்கிறாள்’ என்று மனம் நிறைய மனைவி மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கும். இதைப் பரஸ்பரம் பேசி சரி செய்துகொள்ள மாட்டார்கள். மனதுக்குள்ளே வைத்து குமுறிக் கொண்டிருப்பார்கள். இதன் விளைவாகச் சிடுசிடுப்பு, சண்டை என்று பிரச்னைகள் நீண்டுக்கொண்டே போகும்.
இந்த நேரத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ வெளிநபர் யாராவது அன்புக் காட்டினாலோ அல்லது அவர்களுடைய திறமையை சிறிதளவு பாராட்டினாலோ, ‘நம்முடைய பழைய உறவில் இருந்து வெளிவந்து இந்த புது உறவில் ஈடுபடலாமோ’ என்கிற தடுமாற்றம் அவர்களுக்கு வரும். அந்தத் தடுமாற்றத்தின் பெயர்தான் செவன் இயர் இட்ச். நாலைந்து நாள்கள், தனிமையில் மனம்விட்டுப் பேசிக் கொள்கிற இரண்டாம் தேனிலவு, செவன் இயர் இட்ச் பாதிப்பை நிச்சயம் மாற்றும்.
பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு, கணவன் – மனைவி பிரிந்து தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதையெல்லாம் மாற்றி, தம்பதியரிடையே மீண்டும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், கணவன் – மனைவி மட்டும் சேர்ந்து செல்கிற தனிமைப் பயணங்கள் அதற்கு உதவும். இதற்கு இரண்டாவது தேனிலவு மிக நல்ல சாய்ஸ். அந்தக் காலத்தில் தீர்த்த யாத்திரை பயணங்களின் அடிப்படைக்கூட இதுதான். இரண்டாம் தேனிலவு என்றால், நிறையப் பேர் ‘அது செக்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ்க்கானது’ என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. அதில் செக்ஸும் இருக்கும் என்றாலும், மனதின் ஆழத்துக்குள் போய்விட்ட தாம்பத்தியத்தைப் புதுப்பித்துக் கொள்கிற ஒரு வழிதான் இந்த இரண்டாம் தேனிலவு. ஆனால், அங்கேப் போய் சொந்தக் கதை, சோகக்கதை பேசுவது, பழையப் பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு செல்வதெல்லாம், செகண்ட் ஹனிமூனுக்கான அடிப்படையையே அசைத்துவிடும்.”
”அழைத்துச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது. சின்னக் குழந்தைகள் என்றால், உடன் அழைத்துச் சென்று விடுங்கள். வளர்ந்த பிள்ளைகள் என்றால், நம்பிக்கையான யாரிடமாவது அவர்களை விட்டு விட்டுச் செல்லுங்கள். உங்கள் டிரிப்பை 2 அல்லது 3 நாள்கள் மட்டுமாக வைத்துக்கொள்ளுங்கள். டீன் ஏஜ் பிள்ளைகள் என்றால், ‘அப்பா – அம்மாவுக்கு அந்தரங்கமாக மனம் விட்டுப் பேச வேண்டும்’ என்று நாகரிகமாக சொல்லிவிட்டுக் கிளம்புங்கள்.”
”ஒரு கணவன், தன் மனைவியை ஒரு டீச்சர் மாதிரி, ஒரு போலீஸ்காரி மாதிரி, ஒரு வக்கீல் மாதிரி நினைத்துவிட்டான் என்றால், மனைவி உலக அழகியாகவே இருந்தாலும் அவள் மீது ஈர்ப்பு வராது. ஆணுடைய செக்ஸூவல் இயல்பு இதுதான். அதனால், மனைவிகள் கணவரை அவ்வப்போது அப்பர் ஹேண்ட் எடுக்க விடுங்கள்; அவரைக் கொஞ்சம் ஸ்பெஷலாக நடத்துங்கள். ரொமான்ஸ்க்கான, ஃபிரெண்ட்லியான தாம்பத்தியத்துக்கான நல்ல யுக்தி இதுதான்.
அடுத்து, மனைவிகளின் உடையலங்காரம். ‘என் புருஷன்தானே. அவர் முன்னாடி நான் எப்படி டிரெஸ் பண்ணிக்கிட்டிருந்தா என்ன’ என்று மனைவிகள் நினைப்பது சரியாக வராது. பெண்களின் தோற்றத்தைப் பார்த்துத்தான் ஆண்களுக்கு ரொமான்ஸ் உணர்வே வரும். ஆண்களுடைய மூளையின் வடிவமைப்பே இப்படித்தான் என்னும்போது, இதற்கு ஏற்றபடி மனைவிகள் நடந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். இதில் கணவர்களுக்கும் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. வீட்டு வேலைகள், வெளி வேலைகள், குழந்தைகளுக்கான வேலைகள், வீட்டில் இருக்கிற பெரியவர்களுக்கான வேலைகள் எல்லாம் செய்து களைத்துப் போயிருக்கிற மனைவி, தினமும் உங்கள் கண்களுக்கு ஃபிரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.
அடுத்தது மிக மிக முக்கியமான இரண்டு பாயிண்ட்ஸ். மனைவிகளுக்குக் கணவர்களிடம் முக்கியமான எதிர்பார்ப்பொன்று இருக்கிறது. தன் கணவன் தன்னை எங்கேயும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதுதான் அதில் முதல் பாயிண்ட்ஸ். இரண்டாவது, தன்னை மற்றப் பெண்களுடன் கம்பேர் செய்து, ‘எங்கம்மாவைப் பாரு எவ்வளவு நல்லா சமைக்கிறா, நீயும் சமைக்கிறியே’, ‘குடும்பம் நடத்துறதுன்னா என் ஃபிரெண்டோட வொய்ஃபைப் பார்த்துக் கத்துக்கோ’ என்று சொல்கிற கணவன்களைப் பார்த்தாலே மனைவிகளுக்குக் கோபம்தான் வரும். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், கணவர்கள் தங்கள் மனைவிகளை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் ‘ஆண்’ என்று கொண்டாடுவாள்.
மொத்தத்தில் செக்ஸ் தவிர மற்ற விஷயங்களில் எல்லாம், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் காயப்படுத்திவிட்டு, தாம்பத்தியம் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் அது நடக்காது. ஸோ, வெளி விஷயங்களில் ஒருவரையொருவர் மரியாதையாக நடத்துங்கள். தாம்பத்தியம் தானாகவே ஃபிரெண்ட்லியாக மாறும்.
இரண்டாவது தேனிலவை, உங்கள் அன் கண்டிஷல் லவ்வை உங்கள் துணைக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டால், உங்கள் உறவு இரண்டாம் தேனிலவில் நிச்சயம் புதுப்பிக்கப்படும்” என்கிறார் டாக்டர் ஷாலினி.
Vikatan play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…