சென்னை,
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், 3-வது வரிசையில் களம் கண்டு கடைசி வரை நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய திலக் வர்மா அணியை கரைசேர்த்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா 72 ரன்கள் அடித்து தனி ஆளாக போராடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் திலக் வர்மா, இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரின் பந்து வீச்சில் மட்டும் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கி டி20 கிரிக்கெட்டில் தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் சிறந்த பவுலரை அடித்து நொறுக்கினால் மற்றவர்களும் தடுமாறுவார்கள் என்ற நோக்கத்துடன் ஆர்ச்சரை வெளுத்து வாங்கியதாக திலக் வர்மா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “அவர்களின் சிறந்த பவுலரை நான் டார்கெட் செய்ய விரும்பினேன். ஏனெனில் அவர்களுடைய சிறந்த பவுலரை நீங்கள் அட்டாக் செய்யும்போது மற்ற பவுலர்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனவே மறுபுறம் விக்கெட்டுகள் விழும்போது நான் எதிரணியின் சிறந்த பவுலரை எதிர்கொள்ள விரும்பினேன். அதை நான் செய்வது எங்களுடைய மற்ற பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாட உதவும்.
அதனால் எனக்கு நானே ஆதரவு கொடுத்து ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அவருக்கு எதிராக நான் வெளிப்படுத்திய ஷாட்டுகள் வலைப் பயிற்சியில் வேலை செய்ததாகும். அதற்கு நான் மனதளவில் தயாராக இருந்தேன். அவ்வாறு செய்தது எனக்கு நல்ல முடிவை கொடுத்துள்ளது. எது நடந்தாலும் நான் களத்தில் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” என கூறினார்.