இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது திருமாவளவன் கருத்து

சென்னை: இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: அரசமைப்புச் சட்டம் அனைத்து தளங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே நீதிபதிகளாக இருக்க முடியும் என்ற சூழல் ஏன் நீடிக்கிறது? அங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நெருக்கடியை எது தருகிறது. இன்னும் இந்த நாட்டை மனுஸ்மிருதி தான் ஆண்டு கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக போராட வேண்டியிருக்கிறது.

சமூகத்தில் சாதி இருக்கிறது. இந்தியாவில் சாதி பார்க்காமல் எந்த செயலும் மனித குலத்தில் இல்லை. இதன்மூலம் சனாதன சட்டமே இயங்குகிறது, அரசமைப்புச் சட்டம் அல்ல என்பது தெளிவாகிறது. சமூக நீதி மூலமாகவே சமூக ஜனநாயகத்தை கொண்டு வர முடியும்.

ஆனால், முன்னேறிய சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்று சட்டத்தை கொண்டு வந்து சமூக நீதியை கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதன் மூலமாகவே குடியரசை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஆர்.சுதா எம்.பி., உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.