ஐபிஎல் 2025: சம்பவம் செய்யப்போகும் இந்த 4 வெளிநாட்டு வீரர்கள் – இவர்களை தடுப்பது கஷ்டம்!

IPL 2025 Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. இன்னும் முழுமையான அட்டவணை வெளியாகவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப். 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அந்த தொடரின் மத்தியிலோ அல்லது மார்ச் 9ஆம் தேதி தொடர் நிறைவேற்ற பின்னரோ ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்படலாம். இந்த முறையும் அதே 10 அணிகள், இம்பாக்ட் வீரர்கள் விதியுடன் களமிறங்க உள்ளன.

கடந்தாண்டு நவ. 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) ரூ.639.15 கோடி மொத்தமாக செலவிடப்பட்டு 182 வீரர்களை 10 அணிகளும் எடுத்தன. இதில் 62 வெளிநாட்டு வீரர்களும் அடங்கும். ஒவ்வொரு அணியிலும் தலா 8 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடும் அணியே தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பதால் சரியான 4 வெளிநாட்டு வீரர்களை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர அணிகள் கடும் சிரத்தை எடுக்கும்.

IPL 2025: சம்பவம் செய்யப்போகும் இந்த 4 வெளிநாட்டு வீரர்கள்

அந்த வகையில், பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்கள், டி20ஐ போட்டிகள் ஆகியவற்றில் பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு விளையாடும் அனுபவம் கொண்டவர்கள் குறைவானவர்கள்தான். மேலும், இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு புதிய வெளிநாட்டு வீரர்களும் வருகை தருகின்றனர் என்பதால் இங்குள்ள அழுத்தமும், புறச்சூழலும் அவர்களுக்கு பழகியிருக்காது. இவை ஒருபுறம் இருக்க, இந்த 2025 ஐபிஎல் தொடரில் (IPL 2025), இந்த நான்கு வெளிநாட்டு வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

IPL 2025: டிராவிஸ் ஹெட்

இந்த லிஸ்ட்டை இப்போது போட்டாலே நிச்சயம் அனைவரும் மனதிற்கும் முதலில் வருபவர் இவராக தான் இருப்பார். சன்ரைசர்ஸ் அணி இவரை 2024 ஏலத்தில் ரூ.6.8 கோடிக்கு எடுத்து, தற்போது ரூ.14 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இதன்மூலமே அவரின் முக்கியத்துவம் புரிந்திருக்கும். 

கடந்தாண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடி அணுகுமுறையில் வெற்றிக்கரமாக செயல்பட்டு, இறுதிப்போட்டி வரை வந்ததற்கு டிராவிஸ் ஹெட் (Travis Head) முக்கிய பங்காற்றினார். இந்தாண்டும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அதே சிறப்பான பார்மை தொடர்கிறார். எனவே, 2025 ஐபிஎல் சீசனிலும் இவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.

IPL 2025: ஜோஷ் ஹேசில்வுட் 

கடந்த சீசனில் இவர் விளையாடவில்லை. பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் காயம் ஏற்பட்டதால் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இருப்பினும், தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஹேசில்வுட் (Josh Hazlewood) தேர்வாகியிருப்பதால் ஆர்சிபி அணியும் சற்று பெருமூச்சுவிட்டுள்ளது. ஆர்சிபி இவரை ரூ.12.50 கோடிக்கு எடுத்தது வேறு விஷயம், ஹேசில்வுட்டை வைத்துதான் ஆர்சிபி அதன் வேகப்பந்துவீச்சு அட்டாக்கை வடிவமைக்கும் திட்டத்தில் உள்ளது. 

ஆர்சிபியில் சிராஜ் இல்லை என்பதால் புதிய பந்து நேராக ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரின் கைகளுக்கு தான் செல்லும். டெத் ஓவரிலும் ஹேசில்வுட் மிரட்டுவார். எனவே, ஆர்சிபியில் ஹேசில்வுட் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025: ஜாஸ் பட்லர் 

குஜராத் அணியில் சுப்மான் கில், சாய் சுதர்சன் என இரண்டு இந்திய பிரீமியம் ஓப்பனர்கள் இருந்தாலும், அதன் விக்கெட் கீப்பர் தேவையையும் அதிரடி ஓப்பனரின் தேவையையும் மனதில்கொண்டு ரூ.15.75 கோடிக்கு ஜாஸ் பட்லரை (Jos Butler) அந்த அணி ஏலத்தில் தட்டித்தூக்கியது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாகவே பட்லர் ரன்களை குவித்து வந்த நிலையில் அதனை இந்த தொடரிலும் தொடர்வார் என எதிர்பார்க்கலாம். அதற்கு தற்போது நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரே சாட்சி எனலாம். எனவே, குஜராத்தின் பேட்டிங் ஆர்டரில் பெரிய தாக்கத்தை பட்லர் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

IPL 2025: அல்லா கசன்ஃபர் 

மும்பை அணி இவரை மெகா ஏலத்தில் ரூ.4.8 கோடிக்கு வாங்கியது. அணியில் சரியான சுழற்பந்துவீச்சாளர்களே இல்லை என தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளை கருத்தில்கொண்டு கசன்ஃபர், சான்ட்னர், கரன் சர்மாவை மும்பை எடுத்திருக்கிறது. இதில் அல்லா கசன்ஃபர் (Allah Ghazanfar) நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் மும்பை அணிக்காக விளையாடுவார் எனலாம். 

19 வயதே ஆகும் இந்த இளைஞர் ஆஃப் ஸ்பின்னில் கலக்கி வருகிறார். பல்வேறு டி20 தொடர்களிலும், டி20ஐ போட்டிகளிலும் கட்டுக்கோப்பாக ரன்களை கொடுப்பது மட்டுமின்றி சாமர்த்தியமாக விக்கெட் எடுக்கும் திறனையும் வைத்திருக்கிரார். இந்திய மண்ணில் எப்படி செயல்படுவார் என்பது இன்னும் புரியாத புதிர் என்றாலும் நிச்சயம் தனது சுழல் ஜாலத்தால் அதிரடி பேட்டர்களை மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 2025 ஐபிஎல்-லில் வரவுள்ள கடுமையான மாற்றங்கள்! ஐசிசி விதிகள் பின்பற்றப்படும்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.