சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னையில் காங்கிரஸார் பாதயாத்திரை மேற்கொண்டனர். நாட்டின் 76-வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் முன்னிலையில் அக்கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய்சம்விதான் (சட்டம் இயற்றியநாள்) பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் சென்னை மணிக்கூண்டு அருகில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வரை நடைபெற்றது. பாதயாத்திரையில் காந்தி, அம்பேத்கர் மற்றும் அரசியலைப்பை போற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் மற்றும் தேசியக் கொடி ஏந்தி வந்தனர்.
பாதயாத்திரை நிறைவில் கட்சி அலுவலகத்தில் செல்வபெருந்தகை தேசியக் கொடியேற்றி வைத்து பேசினார். இந்த நிகழ்வில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, திருநாவுக்கரசர், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.