புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்பட பல துறவிகள் உடன் இருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மகா கும்பமேளாவில், மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பலரும் புனித நீராடி வருகின்றனர். நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது குடும்பத்தினருடன் இன்று (திங்கள்கிழமை) பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்தார். பின்னர், அராலி காட் பகுதிக்கு படகு சவாரி செய்தார். அவருடன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கே.பி. மௌரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
காவி வேட்டி அணிந்தபடி திரிவேணி சங்கத்தில் அமித் ஷா புனித நீராடினார். யோகி ஆதித்யாநாத், பாபா ராம்தேவ் உள்பட பல்வேறு துறவிகள் அவருடன் புனித நீராடினர்.
பிரயாக்ராஜுக்குப் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகா கும்பமேளா என்பது சனாதன கலாச்சாரத்தின் தடையற்ற ஓட்டத்தின் தனித்துவமான சின்னம். கும்பம், நமது நித்திய வாழ்க்கைத் தத்துவத்தை நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்று, புனித நகரமான பிரயாக்ராஜில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் இந்த மாபெரும் விழாவில் சங்கமத்தில் நீராடி, துறவிகளின் ஆசீர்வாதங்களைப் பெற ஆர்வமாக உள்ளேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு நாள் பயணமாக பிரயாக்ராஜ் வந்துள்ள உள்துறை அமைச்சர், இந்து துறவிகள் பலருடன் சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகாராஜ் மற்றும் ஜூனா அகாராவின் பிற துறவிகள், குரு ஷரணானந்த், குரு கோவிந்த் கிரி, சிருங்கேரி, பூரி மற்றும் துவாரகையின் சங்கராச்சாரியார்கள் ஆகியோரை அமித் ஷா சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.