Champions Trophy 2025: இந்திய அணியில் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ் இருந்து வருகிறார். இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவராகவும் உள்ளார். இருப்பினும் சமீபத்திய டெஸ்ட் தொடர்களின் சிராஜ் விக்கெட்களை எடுக்க தவறினார், இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் பும்ராவின் காயம் இன்னும் குணமடையாததால் அவர் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றாலும் ஷமி பிளேயிங் லெவனின் இடம்பெறவில்லை. இதனால் முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
ஆகாஷ் சோப்ரா பதில்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி அணியில் முகமது சிராஜ் நிச்சியம் இடம் பெறுவார் என்று தெரிவித்துள்ளார். “ஷமி அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இடம் பெற்றுள்ளார், எனவே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பும்ப்ராவை பற்றி யாருக்கும் தெரியாது .அவருடைய காயம் குணமடையுமா என்று சொல்ல முடியாது. எனவே ஹர்ஸ்தீப் சிங்கை மட்டும் வைத்துக் கொண்டு செல்ல முடியாது. பும்ரா வெளியேறினால் சிராஜ் நிச்சயம் அணியில் இடம் பெறுவார். அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை அவர் தனது பந்துவீச்சின் மூலம் சரி செய்ய வேண்டும். தற்போது இரண்டு டி20 போட்டிகள் முடிவடைந்துள்ளது, ஆனால் ஷமி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. காயத்திலிருந்து பும்ரா முழுமையாக குணமடையாமல் அவரை அணியில் தேர்ந்தெடுக்க முடியாது. இதற்கு முன்னர் அப்படி தேர்ந்தெடுத்து என்ன ஆனது என்று நம் அனைவருக்கும் தெரியும். எனவே சிராஜ் அணியில் சேர்க்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
முகமது சிராஜ் குறித்து ரோஹித் சர்மா
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். “புதிய பந்தில் சிராஜ் நன்றாக வந்து வீசுகிறார், ஆனால் பழைய பந்தில் அவர் ரன்களை அதிகம் அடிக்க விடுகிறார். அதன் காரணமாகவே ஹர்ஸ்தீப் சிங் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியவில்லை” என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா.