சென்னை: குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
நாட்டின் 76-வது குடியரசு தினம் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. காலை 7.53 மணிக்கு சென்னை போக்குவரத்து காவலர்களின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவரை தலைமைச் செயலர் முருகானந்தம் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து, 7.55 மணிக்கு விமானப்படை வீரர்களின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்று, முப்படை அதிகாரிகள், கடலோர காவல் படை, தமிழக காவல், சென்னை காவல் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
காலை 8 மணிக்கு உழைப்பாளர் சிலை பகுதியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். ஆளு நருடன் முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். அப்போது தேசிய கீதம் இசைக்க, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அங்கு மலர்கள் தூவப்பட்டன.
முப்படைகள் அணிவகுப்பு: பின்னர், விங் கமாண்டர் சர்தாத் புதியா தலைமையிலான வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். தரைப்படை, கடற்படை, வான்படை, ராணுவ பேண்ட் வாத்திய பிரிவு, கடலோர காவல் படை வீரர்களின் அணிவகுப்பை தொடர்ந்து, படைப் பிரிவுகளின் போர் வாகனங்கள் அணிவகுப்பும் நடைபெற்றது. பிறகு, முன்னாள் ராணுவத்தினர், சிஆர்பிஎஃப், சிஆர்பிஎஃப் பேண்ட் வாத்திய பிரிவு, சிஐஎஸ்எஃப், ஆர்பிஎஃப் படைப்பிரிவினர் அணிவகுத்து வந்தனர்.
பிறகு, தமிழக காவல் துறை துறை கமாண்டன்ட் என்.மணிவர்மன் தலைமையில் தமிழக சிறப்பு காவல் பெண்கள் படை, ஆயுதப்படை, பேரிடர் மீட்பு படை, கடலோர பாதுகாப்பு குழு, சென்னை பெருநகர காவல், சிறப்பு படை கமாண்டோ, நீலகிரி படைப்பிரிவு, குதிரைப்படை, வனத்துறை, சிறைப்படை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, சாலை பாதுகாப்பு சுற்றுக்காவல், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் என பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு, ஜேஎச்ஏ அகர்சன் கல்லூரி மாணவர்கள், குட் ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி மற்றும் டிஎஸ்டி ராஜா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் பேண்ட் வாத்திய பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய ஏற்பாட்டில், அசாம் மாநிலத்தின் பர்தோய் சிகாலா நடனம், ஆந்திர மாநிலத்தின் மாதுரி நடனம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரௌஃப் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செய்தி துறை சார்பில், மதுரை யில் உள்ள தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்தினர் ஜிக்காட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அலங்கார வாகனங்கள்: தொடர்ந்து, செய்தி துறையின் 2 வாகனங்கள், காவல், விளையாட்டு, கூட்டுறவு – உணவு, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பள்ளிக்கல்வி, சுகாதாரம், கைத்தறி, ஆதிதிராவிடர் – பழங்குடியினர், சுற்றுலா, சமூகநலம், கால்நடை, பொது தேர்தல்கள், தகவல் தொழில்நுட்பம், வீட்டுவசதி. வனம், இந்து சமய அறநிலையங்கள், மீன்வளம், தீயணைப்பு துறைகளின் அலங் கார வாகனங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
விதவிதமாக வண்ணமய மான அலங்காரங்களுடன் வலம்வந்த வாகனங்களை நேரிலும், பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளிலும் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் கு.பிச்சாண்டி, துணை முதல்வர் உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டிஜிபி சங்கர் ஜிவால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘இந்தியாவின் 76-வது குடியரசு நாளில், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மாண்பு ஆகியவற்றை உறுதி செய்யும் நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை போற்றுவோம். முற்போக்கான, அனைவரையும் உள் டைக்கிய கனிவான இந்தியாவை கட்டமைக்க வேண்டியநம் கூட்டுக் கடமையை இந்த நாள் நமக்கு நினைவூட்டட்டும். அனைவருக் கும் நம்பிக்கையும், நல்நோக்க மும் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளனர்.