புதுடெல்லி: டெல்லியில் 76-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பறக்கவிட்டார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி பெருக்குடனும் நேற்று கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமை பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரை படை சூழ சாரட் வாக னத்தில் விழாவுக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோ னேசிய அதிபர் பிரபோவா சுபி யாண்டோவை பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.
21 குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிட்டார். இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
பின்னர் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. துணை கமாண்டர் ஐஸ்வர்யா ஜாய் தலைமையில் சிஆர்பிஎஃப் படை வீராங்கனைகள் மிடுக்காக அணிவகுத்தனர். என்சிசி பெண்கள் அணியின் அணி வகுப்பை ஏக்தா குமாரி தலைமை ஏற்று நடத்தினார். என்சிசி பெண்கள் இசைக் குழுவை அனிதா குமாரி வழிநடத்தினார். கமாண்டர் தீபக் சிங் தலைமையில் என்எஸ்எஸ் பெண்கள் அணி கம்பீரமாக அணிவகுத்தது.
ரஃபேல் உட்பட 22 போர் விமானங்கள், 11 சரக்கு விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை மிஞ்சும் வகையில் அதிநவீன போர் விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் அணி வகுப்பில் இடம்பெற்றன.
உள்நாட்டில் தயாரான பிரசந்த் ஹெலிகாப்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது 16,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரளயம் ஏவுகணையும் அணிவகுப்பில் கம்பீரமாக பங்கேற்றது. இது மணிக்கு 2,000 கி.மீ. வேகத்தில் 500 கி.மீ. வரை சீறிப் பாயும் திறன் கொண்டது. சீன எல்லை பகுதிகளில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. உத்தர பிரதேச அரசு சார்பில் மகா கும்பமேளாவை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் 16 துறைகளை சேர்ந்த அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன. சுமார் 5,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
மிதக்கும் பீரங்கி.. சீறும் ஏவுகணை: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்த சோராவர் பீரங்கியும் இடம்பெற்றது. இது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லும், மலைப் பகுதிகளில் எளிதாக ஏறும். நதிகளில் மிதந்து எளிதாக கரையை கடக்கும்.
டிஆர்டிஓ உருவாக்கிய துர்கா-2 ரக லேசர் கருவியும் அணிவகுப்பில் கவனத்தை ஈர்த்தது. நிலம், நீர், வான் பரப்பில் இதை பயன்படுத்த முடியும். இதன்மூலம் அணு ஆயுத ஏவுகணைகளை தாக்கி அழிக்கலாம். 25 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளை இது துல்லியமாக தாக்கும்.
அமெரிக்காவின் ஹிமார்ஸ் ஏவுகணைக்கு இணையான பினாகா ஏவுகணைகள் கம்பீரமாக வலம் வந்தன. இது மணிக்கு 5,800 கி.மீ. வேகத்தில் சீறி பாயக்கூடியவை. அதிநவீன ராக்கெட் லாஞ்சர் மூலம் 44 விநாடிகளில் 12 பினாகா ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவ முடியும். இது 800 கி.மீ.வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். நாக் ஏவுகணை, டி4எஸ் கவச வாகனம், டி-90 பீஷ்மா பீரங்கி, ஆருத்ரா, சஞ்சய் ரேடார்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களும் கவனத்தை ஈர்த்தன.