புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கின்னர் அகாடாவில் இணைந்த நடிகை மம்தா குல்கர்னிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மம்தாவுக்கு நிழல் உலக தாதாக்களுடன் நெருக்கமானத் தொடர்பு இருந்துள்ளதாகவும், தற்போது இவருக்கு கின்னர் எனப்படும் திருநங்கைகள் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. 1990 ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர், திரைத்துறையிலிருந்து விலகி துபாயில் வாழ்ந்து வந்தார். சுமார் 25 வருடங்களுக்கு பின் இந்தியா திரும்பியவர் பிரயாக்ராஜின் கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்டார்.
இவருக்கு கின்னர் எனப்படும் திருநங்கைகள் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பதவியும் அளிக்கப்பட்டது. இதற்கான சடங்குகள், இருதினங்களுக்கு முன் அகாடாவின் தலைவர் மகரிஷி ஆச்சாரியா டாக்டர்.லஷ்மி நாராயண் திரிபாதி முன்னிலையில் செய்து வைக்கப்பட்டது. இதற்கு கின்னர் அகாடாவின் திருநங்கையும் மகா மண்டலேஷ்வருமான ஹிமான்ஷி சக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகா மண்டலேஷ்வர் ஹிமான்ஷி சக்கி கிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மம்தாவிற்கு நிழல் உலக தாதாக்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது.இத்துடன் அவர் தன் கணவருடன் போதை மருந்துகள் கடத்தல் வழக்கிலும் சிக்கியிருந்தார். இதற்காக இருவரும் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இதுபோன்ற தகவல்களை சரியாக விசாரிக்காமல் அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவியும் அளிக்கப்பட்டு விட்டது.
மேலும் திருநங்கைகளுக்கான எங்கள் கின்னர் அகாடாவில் பெண்ணான அவரை சேர்த்தது ஏன்? இதைவிட கின்னார் அகாடாவின் பெயரை இனி மாற்றி விடலாம்.” என விமர்சித்துள்ளார். மேலும், துறவறத்திற்கான எந்த பயிற்சிகளும் முறையாக அளிக்காமல் அவரை மகா மண்டலேஷ்வராக்கியதும் தவறு என்றும் ஹிமான்ஷி புகார் தெரிவித்துள்ளார்.
தமது எதிர்ப்பிற்கு வலுசேர்க்க அவர் கின்னர் அகாடாவின் இதர துறவிகள் ஆதரவையும் சேகரிக்கிறார். இதனால், பாலிவுட்டிலிருந்து துறவறம் மேற்கொண்ட முதல் நடிகையான மம்தாவின் மகா மண்டலேஷ்வர் பதவியும் சிக்கலுக்கு உள்ளாகி விட்டது. இந்த பதவிக்கு பின் மம்தா குல்கர்னியின் பெயர் ஷியாமாய் மம்தானந்த் கிரி என மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.