பும்ராவை பற்றி ஒரே நேரத்தில் வெளியான நல்ல செய்தி மற்றும் கெட்ட செய்தி!

இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு பும்ரா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரின் துல்லியமான பவுலிங் பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்து வருகிறது. பல போட்டிகளை தனி ஒருவராக அணிக்கு வென்று கொடுத்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்து அசத்தினார். இந்நிலையில் பும்ராவை பற்றி நல்ல செய்தியும், கெட்ட செய்தியும் ஒரே சமயத்தில் வெளியாகி உள்ளது.

நல்ல செய்தி

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். பும்ரா 2024 ஆம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 357 ஓவர்கள் பந்துவீசி 14.92 சராசரியில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே மற்றும் கபில்தேவ் ஆகியோருக்கு பிறகு 70க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இலங்கையின் கமிந்து மெண்டிஸ், இங்கிலாந்தின் ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை முந்தி இந்த விருதை வென்றுள்ளார் பும்ரா.

மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: “என் கல்யாணமே நின்றுவிட்டது”.. கதறும் நபர்!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை எப்படியாவது கொண்டு செல்ல வேண்டும் என்று சிறப்பாக விளையாடி வந்தார் பும்ரா. ஆனால் இந்திய அணி பைனலுக்கு முன்னேறவில்லை. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்டில் சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெற செய்தார். அதன் பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 13.06 மற்றும் ஸ்டிரைக் ரேட் 28.37ல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும் இந்த தொடரில் தனது 200 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. இருப்பினும் இந்திய அணி இந்த தொடரை 3-1 கணக்கில் தோற்றது.

கெட்ட செய்தி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியின் போது பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது தீவிர ஓய்வில் இருந்து வருகிறார். காயம் இன்னும் முழுவதும் குணமடையவில்லை என்றாலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இடம் பெறுவது சந்தேகம் தான் என்று தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

பும்ராவின் காயத்தை நியூசிலாந்தில் உள்ள பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டில் இதே போல் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் பும்ரா கிரிக்கெட் விளையாடவில்லை. அவருக்கு அந்த சமயத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை அளிக்க உள்ளனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்குள் பும்ரா முழு உடற்தகுதி அடைவது சந்தேகம் தான் தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழுவும் நியூசிலாந்து மருத்துவர்களுடன் தொடர்ந்து காயத்தின் நிலை குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிங்க: காயத்தில் இருந்து இன்னும் மீளாத பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா? வெளியான தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.