புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக 15 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வெளியிட்டார். இந்த வாக்குறுதிகள் கேஜ்ரிவாலின் உத்தரவாதங்கள் என்று குறிப்பிட்ட அவர், அடுத்த 5 ஆண்டுகளில் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். டெல்லியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டெல்லி முதல்வர் அதிஷி, கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள்: “டெல்லியில் வேலையில்லாதவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். டெல்லியில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பெண்களுக்கான மாதாந்திர நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் மாதம் தோறும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும். சஞ்சீவனி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை. தவறான தண்ணீர் கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
அடுத்த மூன்று வாக்குறுதிகள், 2020-ம் ஆண்டிலும் நாங்கள் அளித்தோம். 24 மணி நேரமும் தண்ணீர் வழங்குவோம், யமுனையை சுத்தம் செய்வோம், டெல்லி சாலைகளை ஐரோப்பிய தரத்துக்கு மாற்றுவோம் என்று கூறியிருந்தோம். ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. இரண்டரை ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோய் இருந்தது, பின்னர் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த மூன்று வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற அம்பேத்கர் உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களின் செலவுகளை டெல்லி அரசு ஏற்கும். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் டெல்லி மெட்ரோவில் 50% சலுகை, கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் ரூ.18,000 வழங்கப்படும்.
இலவச குடிநீர், இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகைதாரர்களுக்கும் நீட்டிக்கப்படும். போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் குழாய்கள் சரிசெய்யப்படும். ஒன்றரை ஆண்டுகளில் பழைய கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படும். ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம், குழந்தைகளுக்கு இலவச பயிற்சி, ரூ.10 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு, ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்த குடியிருப்பாளர் நல சங்கங்களுக்கு (RWA) நிதி வழங்கப்படும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.