புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.
இத்திட்டத்தின் படி குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வு வயதுக்கு முன்பாக பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது ராஜினாமா செய்தவர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியம் கிடைக்காது.
நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 23 லட்சம் பேர், கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த தேசிய ஓய்வூதிய திட்டம், மற்றும் தற்போதைய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தகுதியான பணிக்காலம் குறைவாக இருந்தால், விகிதாச்சார அடிப்படியில் ஓய்வூதியம் வழங்கப்படும். 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்றிருந்தால், குறைந்தது ரூ.10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியபின் ஊழியர் தானாக முன்வந்து ஓய்வு பெற்றால், ஊழியர் ஓய்வு பெறும் தேதியிலிருந்து ஓய்வூதியம் தொடங்கும். ஓய்வூதியர் இறந்தால் அவரது இறப்புக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதம், ஓய்வு பெற்ற தேதியில் அல்லது தானாக முன்வந்து ஓய்வு பெற்ற தேதியில் சட்டபூர்வமாக வாழ்க்கைத் துணையாக இருந்தவருக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, அகவிலைப்படி மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசில் இனிமேல் சேரும் அரசு ஊழியர்கள் என்பிஎஸ் அல்லது யுபிஎஸ் என்ற இரண்டு திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். எபிஎஸ் திட்டத்தில் ஏற்கெனவே உள்ள மத்திய அரசு ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்துக்கு மாறினால், என்பிஎஸ் திட்டத்தில் ஏற்கெனவே உள்ள நிதி, யுபிஎஸ் கணக்குக்கு மாற்றப்படும்.
யுபிஎஸ் திட்டத்தில் ஊழியர்களுக்கான ஓய்வு வயதை அவர்கள் பணியாற்றும் துறையின் தலைமை அலுவலகம் தீர்மானிக்கும். அடுத்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் யுபிஎஸ் திட்டத்தில் , அரசின் பங்களிப்பு நிதி 14 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயரும். இந்த யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்தாண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
2004 ஜனவரிக்கு முன்பு உள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தில் (ஓபிஎஸ்), ஊழியர்கள் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற்றனர். இதில் ஊழியர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. இந்த திட்டம் போல் இல்லாமல், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள யுபிஎஸ் திட்டம் பங்களிப்புடன் கூடியது. இதில் ஊழியர்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தையும், மத்திய அரசு 18.5 சதவீதமும் பங்களிப்பாக அளிக்கும்.
இருப்பினும், இறுதியாக வழங்கப்படும் தொகை, அரசாங்க கடனில் முதலீடு செய்யப்பட்ட தொகுப்பு நிதியின் சந்தை வருமானத்தைப் பொறுத்தது.