பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால், ஹுவாங் பிங் என்ற தாத்தா மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார்.
அரசு அதிகாரிகள் பல முறை தாத்தா விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தாத்தா. கடைசி வரை பிடிவாதம் பிடித்தார். வேறு வழியில்லாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். ஆனால் நடந்ததே வேறு. நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. பெரிய பெரிய இயந்திரங்களை கொண்டுவந்து தாத்தா வீட்டை நடுவில் விட்டு விட்டு இருபக்கமும் நெடுஞ்சாலை அமைத்து முடித்தனர். தற்போது தாத்தா
தனது தவறை உணர்ந்து வருந்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது வீட்டுக்காக சீன அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த வீட்டில் என்னால் வசிக்க முடியுமா என்று தெரியவில்லை. வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது. முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால், தற்போது மிகப் பெரிய பந்தையத்தில் தோற்றுவிட்டு நிற்கிறேன். இவ்வாறு அந்த தாத்தா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள தாத்தாவின் வீடு, தற்போது பள்ளத்தில் கிடக்கிறது. அந்த வீட்டின் கூரையும் நெடுஞ்சாலையும் சமமாக உள்ளது. அவர் வீட்டுக்கு வந்து செல்வது மிகவும் சவாலாக உள்ளது.