ஷேக் ஹசீனாவின் மகளை WHO-விலிருந்து நீக்க வங்கதேச இடைக்கால அரசு நடவடிக்கை

டாக்கா: உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநர் பதவியில் இருக்கும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸெட்-ஐ நீக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாஸெட், கடந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஜெனீவாவில் உள்ள WHO நிர்வாகக் குழுவால், தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டார். டெல்லியை மையமாகக் கொண்டு சைமா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சைமா வாஸெட்-ஐ வங்கதேசத்தின் ஊழல் எதிர்ப்பு ஆணையம் (ACC) விசாரித்து வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒரு அதிகாரி, “சைமா வாஸெட்-ஐ உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து நீக்க ACC தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக வங்கதேசத்தின் சுகாதார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதங்களை அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பினார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் மகளின் பதவியை பறிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனினும், சைமா வாஸெட்-ஐ பதவி நீக்கம் செய்ய முடியாது என வங்கதேச வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கதேச அரசின் பரிந்துரையின்பேரில்தான் சைமா வாஸெட் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு பரிந்துரையை அளித்த ஒரு நாட்டின் அரசு வீழ்ச்சி அடைந்தாலும், அதன் முந்தைய பரிந்துரை செல்லததாக ஆகாது. எனவே, சைமா வாஸெட் பதவியில் நீடிப்பார்” என்று விளக்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.