மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது நகைச்சுவையாகப் பேச்சைத் தொடங்கிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, “சில வாரங்களுக்கு முன்பு எனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எனக்கு இந்திய டி.என்.ஏ இருப்பது தெரியவந்தது. நான் இந்திய இசையைக் கேட்கும்போதெல்லாம் நடனமாடத் தொடங்குகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்தானே…” எனப் பேசினார்.
அப்போது சபையில் இருந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்தியாவில் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் ஒரு தொழில்முறை அரசியல்வாதியோ, ராஜ தந்திரியோ அல்ல. என் மனதில் உள்ளதைச் சொல்கிறேன். நான் வந்த இந்த சில நாள்களில் பிரதமர் மோடியின் தலைமைத்துவம், அர்ப்பணிப்புகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். வறுமையை ஒழிப்பதற்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், சமூகத்தின் பலவீனமான பகுதியினருக்கு உதவுவதற்கும் அவர் அளித்த அர்ப்பணிப்பு உத்வேகமளிக்கிறது.
இந்தியாவும் இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளன. நமக்கு மத்தியில் நாகரிக தொடர்புகள் இருக்கிறது. இப்போதும் கூட நமது மொழியின் மிக முக்கியமான பகுதி சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. இந்தோனேசியாவின் பல பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதை கவனிக்க முடியும். நமது அன்றாட வாழ்க்கையில், பண்டைய இந்திய நாகரிகத்தின் செல்வாக்கு வலுவானது. உண்மையில் இதுதான் நமது மரபியலின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.” என்றார்.