உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அது மனிதகுலத்தின் மதம். இந்தியாவில் பல்வேறு வழிபாட்டு செயல்முறைகள் இருக்கலாம். ஆனால் மதம் ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும்தான். கும்பமேளா நிகழ்வு அந்த சனாதன தர்மத்தின் ஒரு பிரதிநிதி.
அதற்கு உதாரணமாக, கடந்த ஜனவரி 14, மகர சங்கராந்தி அன்று கிட்டத்தட்ட ஆறு கோடி பக்தர்கள் சங்கமத்தில் நீராடுவதை பார்த்திருந்தால் புரிந்திருக்கும். எனவே, இந்த ஒற்றுமையின் செய்தி மகா கும்பமேளாவால் வழங்கப்பட்டது. இதில் எந்த பாகுபாடும் இல்லை. சனாதன தர்மத்தை விமர்சித்தவர்களெல்லாம் இதைப் பாருங்கள் என்றுதான் கூறுகிறோம். மகா கும்பமேளா – எந்த ஒரு சாதி அல்லது மதத்திற்கானது அல்ல, இது அனைத்து மதத்துக்குமானது. சனாதான தர்மம் மதங்களின் சிறந்த கலவையாகும்” எனக் குறிப்பிட்டார்.