வருகிற பிப்ரவரி 3ம் தேதி அன்று சிலம்பரசனின் பிறந்த நாள் வருகிறது. அன்று அதிரடியான மூன்று அறிவிப்புகள் வெளியாகும் என அவரே அறிவித்துள்ளார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ சிலம்பரசன் பாடியுள்ள லவ் பிரேக்அப் பாடல் ஒன்று வைரலாகி வருகிறது.
தவிர, சிம்பு இப்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வருகிறது. ‘தக் லைஃப்’ ஜூன் மாதம்தான் வெளியாகிறது. இதற்கிடையே அடுத்த மாதம் சிம்புவின் பிறந்தநாள் வருகிறது. வருடத்திற்கு இரண்டு படங்களாவது அவர் நடிப்பில் வெளியாக வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு இந்தாண்டில் இருந்து பூர்த்தியாகும் என்கிறது அவரது தரப்பு.
சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, வெளிவரவிருக்கும் மூன்று அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விசாரிக்கையில் கிடைத்த ஆச்சரியங்கள் இது. சிம்பு அடுத்து இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார் என்ற தகவல் முன்னரே அறிவிக்கப்பட்டது தான். ஆனால், தேசிங்கு இயக்கும் படம் குறித்தும், பல காலமாகவே பல்வேறு விதமான தகவல்கள் பரவிவருகின்றன.
இதற்கிடையே மலையாளத்தில் ‘2018’ படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்திலும் அவர் நடிப்பார் என்றும், பிரமாண்ட பட்ஜெட்டில் அந்தப் படம் உருவாகும் என்றும் தகவல் பரவியது. இப்படியொரு சூழலில் தான் தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக மூன்று அறிவிப்புகள் வெளியாகும் என சிலம்பரசன் அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் இளம் இயக்குநர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் சிம்புவிற்கு கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். கதை ஒன் லைனைக் கேட்டதும், ‘இப்படி ஒரு கதை’யை தான் எதிர்பார்த்தேன்.
`உடனே லைனை டெவலப் பண்ணுங்க’ என அவரிடம் சூட்டோடு சூடாக ஓகே சொல்லியிருக்கிறார் சிம்பு. இந்தாண்டில் முதலில் டேக் ஆஃப் ஆவது இந்தப் படமாகத்தான் இருக்கும் என்கின்றனர். அந்த இளம் இயக்குநர் வேறு யாருமல்ல. ‘பார்க்கிங்’ பட இயக்குநர் தான். கடந்த 2013 டிசம்பரில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘பார்க்கிங்’. அதன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், அடுத்து சிம்புவை இயக்க உள்ளதாக தகவல். ஸ்கிரிப்ட்டும் ரெடியாக உள்ளது. தன் பிறந்த நாள் அறிவிப்பில், அஸ்வத்தின் படம் எப்போது தொடங்குகிறது? தேசிங்கு பெரியசாமியின் படம் எப்போது தொடங்கும்? ‘பார்க்கிங்’ இயக்குநரின் பட தலைப்பு என்ன? ஆகிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல்கள் உலவி வருகின்றன. இதே ஆண்டில் அத்தனை படங்களும் வெளியாகி, தங்களை உச்சி குளிர வைக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…