இயக்குநர் மிஷ்கின், பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து மிஷ்கின் அவர் பேசியதற்காக நேற்று (ஜனவரி 26) மன்னிப்புக் கோரியிருந்தார். இந்நிலையில் ‘மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு.. தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்பதே அவருக்கு வழக்கமாகிவிட்டது’ என நடிகர் விஷால் விமர்சித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், ‘”யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மேடை நாகரிகம் என ஒன்று இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவை அவன், இவன் என்று மேடையில் பேச யாருக்கும் அதிகாரமில்லை.
இளையராஜா மிகப்பெரிய சாதனைப் படைத்த கலைஞன். அவர் கிட்டத்தட்ட கடவுளின் குழந்தை. அவரது இசையின் மூலமாக அவ்வளவு பேர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு. அதற்கு என்ன செய்ய முடியும்? தவறாகப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார். சில பேருடைய சுபாவத்தை மாற்ற முடியாது. மன்னிப்பு கேட்டாலும், அவர் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர் பேசுவதை கைதட்டி கேட்பதைப் பார்க்க வருத்தமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார். .
மேலும் விஜய் அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விஷால், “2026 ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல், தனி திரையரங்கம் போன்று இல்லாமல் மல்டிப்பிளக்ஸ் போன்ற பல முனை போட்டியாக இருக்கும். நடிகர் விஜய்யின் அரசியலை வரவேற்கிறேன்.
அவர் ஆசைப்பட்டபடி அரசியலுக்கு வருவது நல்லது. 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏராளமான மக்களுக்குக் கிடைக்கவில்லை. நடிகர் விஜய்யின் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு எனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்