அரசுகளிடம் இருந்து கோயில்கள் மீட்கப்பட வேண்டும்: மகா கும்பமேளாவில் துறவிகளின் தர்மசபையில் தீர்மானம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் அரசுகளிடமிருந்து அனைத்து கோயில்களும் மீட்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று (ஜன.28) பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் துறவிகளின் தர்மசபை கூடி விவாதித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் இன்று துறவிகள் தர்மசபை நடத்தினர். திரளாக வருகைவந்த துறவிகளுடன் பாஜக எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான ஹேமாமாலினி, நடிகர் சுனில் ஷெட்டி உடன் வந்திருந்தார். இந்த சபைக்கு தலைமை தாங்கிய ஆன்மிகச் சொற்பொழிவாளரான தேவகிநந்தன் தாகூர் பேசுகையில்,‘இதுவரை பொறுத்திருந்த நாம், இன்னும் எதுவரை பொறுமை காப்பது எங்கள் உரிமையை இனி பறித்தே தீருவோம்.

பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் இங்கு செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்காக இந்து வாரியங்கள் இல்லை. நிலைமை இப்படி இருக்க, இங்கு மட்டும் நாம் முஸ்லிம்களுக்காக வஃக்பு வாரியத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மாற்றாக நாம் சனாதன வாரியம் அமைத்து ஒவ்வொரு கோயிலிலும் கோசாலைகள் அமைக்க வேண்டும். ஆன்மிகச் சுதந்திரம் பெற சனாதனம் அதன் உரிமைகளுடன் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவின் கோயில்கள் அனைத்தும் அரசுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும்’ என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, ‘தேசிய அளவில் சனாதன வாரியம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டம் இயற்றப்பட வேண்டும். அனைத்து சங்கராச்சாரியர்களின் ஆலோசனையின் பேரில் இந்த வாரியம் செயல்பட வேண்டும். இந்த சனாதன வாரியத்துக்கு தலைவருடன் 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவர்களுடன் அனைத்து அகாடாக்களின் முக்கியத் துறவிகளும் இதன் ஆலோசகர்களாக இருப்பர்.

சனாதன வாரியம் அனைத்து கோயில்களின் சொத்து மற்றும் நிதியையும் நிர்வாகிக்கும். ஒவ்வொரு பெரிய கோயில்களிலும் குருகுலப் பாடசாலைகள், ஆயுர்வேத வைத்திய சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இவை பொதுமக்களுக்கும், சமூகத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோயில்களை ஆன்மிகத்தின் அடையாளமாக வளர்த்து பாதுகாக்க வேண்டும். மதம் மாறி இந்துக்களாக வந்தவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஒதுக்கீடு அளிப்பது அவசியம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் உ.பி.யில் வழக்குகளில் சிக்கியுள்ள மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில்களை ஒட்டியுள்ள மசூதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், கோயில்களின் பிரசாதங்கள் வேதமுறைப்படி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவும் வலியுறுத்தப்பட்டன. இதில், தனியார் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் அந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தர்ம சபையானது இன்னும் பெரிய அளவில் நிரஞ்சனி அகாடாவின் முகாமில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடைசிநேரத்தில் இது, ஆன்மிகச் சொற்பொழிவாளரான தேவகிநந்தன் தாகூரின் முகாம் அமைந்துள்ள கும்பமேளா பகுதியின் செக்டர் 17-ல் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மொத்தம் உள்ள 13 அகாடாக்களில் ஒருசிலர் மட்டுமே வந்திருந்தனர்.

இக்கூட்டத்துக்கு வித்திட்ட அகில இந்திய அகாடா பரிஷத்தின் (ஏஐஏபி) தலைவர் ரவீந்திர புரியும் வருகை தரவில்லை. சனாதன வாரியத்துக்கு ஏற்கெனவே விஷ்வ இந்து பரிஷத் ஆதரவளிக்க முடியாது எனக் கூறி விட்டது. இதனால், சனாதன வாரியம் அமைப்பதில் துறவிகள் இடையே இருவேறு கருத்துகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கு காரணமாக, முஸ்லிம்களின் வஃக்பு வாரியத்தை ஒழித்த பின்பே சனாதன வாரியம் அமைக்க முடியும் என வேண்டும் என ஏஐஏபி-யின் தலைவர் ரவீந்திர புரி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.