புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.1,685.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக இந்த நிதி ஆண்டில் அக்கட்சிக்கு ரூ.4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 83% வருவாய் அதிகரித்துள்ளது.
பாஜக, காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் 2023-24-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில், அதிக நிதி பெற்ற கட்சியாக பாஜக உள்ளது.
பாஜகவின் தணிக்கை அறிக்கையின்படி, சந்தா மூலமாக ரூ.2.71 கோடி, நன்கொடை மூலம் ரூ.3,967.14 கோடி கிட்டியுள்ளது. இதில் ரூ.1,685.6 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது.வங்கி வட்டி மூலம் ரூ.37.92 லட்சம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி மூலம் ரூ.368.65 கோடி, பிற வருவாய் மூலம் ரூ.1.57 கோடி என மொத்தம் ரூ.4,340 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2022-23-ல் இந்த தொகை ரூ.2,360 கோடியாக இருந்தது. 2022-23-ல் நன்கொடை மூலமாக ரூ.2,120 கோடி பெற்றிருந்த நிலையில், 2023-24-ல் அது ரூ.3,967.14 கோடியாக உயர்ந்துள்ளது.
செலவினங்களைப் பொறுத்தவரை, பணியாளர்களுக்கான ஊதியம் ரூ.73.52 கோடி, நிர்வாகச் செலவு ரூ.3,49.71 கோடி, நிதிச் செலவு ரூ.56.38 லட்சம், தேர்தல் செலவு ரூ.1,754 கோடியாகவும், இதர செலவு ரூ.3.21 கோடி என 2023-24 நிதி ஆண்டில் ரூ.2,211 கோடி செலவிட்டிருக்கிறது பாஜக. 2022-23 நிதி ஆண்டில் மொத்த செலவினம் ரூ.1,361 கோடியாக இருந்தது.
பாஜக-வின் தேர்தல் பிரச்சார செலவினங்களைப் பொறுத்தவரை, 2022-2023-ஆம் ஆண்டில் ரூ.1,092.15 கோடியாக இருந்தது. அது 2023-2024-ஆம் ஆண்டில் ரூ.1,754.06 கோடியாக உயர்ந்தது. விளம்பரத்துக்காக ரூ.591.39 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் மக்களவைத் தேர்தல் காரணமாக செலவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நிலை என்ன? – பாஜகவைப் போலவே, காங்கிரஸும் 2023-2024-ஆம் ஆண்டில் அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. 2022-2023-ஆம் ஆண்டில் ரூ.268.62 கோடி நன்கொடையைப் பெற்ற காங்கிரஸ், 2023-2024-ஆம் ஆண்டில் ரூ.1,129.66 கோடியை நன்கொடையைாகப் பெற்றுள்ளது. இது 320% அதிகரிப்பு.
காங்கிரஸ் கட்சியின் நன்கொடைகளில் 73% தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கப் பெற்றவை. இது 2022-23-ல் ரூ.171.02 கோடியாக இருந்து, 2023-24-ல் ரூ.828.36 கோடியாக அதிகரித்துள்ளது. காங்கிரஸின் தேர்தல் செலவுகள் 2022-2023-ல் ரூ.192.55 கோடியாக இருந்து, 2023-24-ல் ரூ. 619.67 கோடியாக உயர்ந்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ்: 2023-2024-க்கான திரிணமூல் காங்கிரஸின் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, மம்தா பானர்ஜியின் கட்சி பெற்ற நன்கொடை 2022-23-ம் ஆண்டில் ரூ.333.46 கோடியாக இருந்து, 2023-24-ல் ரூ. 646.39 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், 95% தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவை.