புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி(58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியவர்கள் நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருமயம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
படுகொலை செய்யப்பட்ட ஜகபர் அலி குடும்பத்துக்கு தே.மு.தி.க சார்பில் ரூ. 50,000 நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. நேற்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜகபர் அலி குடும்பத்தினரைச் சந்த்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், ஜகபர் அலி குடும்பத்தி்த்தினரை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பினர் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு ஓ.பி.எஸ் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.