சென்னை: இளம்பெண்களை காரில் விரட்டிய கும்பல்… பேசுபொருளான சம்பவம் குறித்து போலீஸ் சொல்வதென்ன?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலத்தில் இந்த கார் சென்றபோது இரண்டு கார்கள் பின்தொடர்ந்தது. காரில் உள்ள கண்ணாடி மூலம் இரண்டு கார்கள் தங்களைப் பின்தொடர்வதை கண்டறிந்தவர்கள் பீதியடைந்தனர். பின்னர் தங்களைப் பின்தொடரும் கார்களை பெண்கள், செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பெண்கள் பதிவு செய்தனர். அந்த வீடியோவில் பெண்கள் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய காரும் அதைத் தொடர்ந்து இன்னொரு காரும் விரட்டி வருவது தெளிவாகத் தெரிகிறது.

சிசிடிவி

வீடியோ வைரலான சூழலில் சம்பந்தப்பட்ட பெண்கள் தரப்பில் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் தங்களைப் பின்தொடர்ந்த இரண்டு கார்களின் பதிவு நம்பர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கார்களின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் சென்னை நங்கநல்லூர் முகவரி, கன்னியாகுமரி முகவரி ஆகியவற்றை கண்டறிந்துள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெண்கள் பயணித்த காரைப் பின்தொடர்ந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் பத்திரிகை செய்திக்குறிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கடந்த 26.1.2025-ம் தேதி சின்னி திலங்க் என்பவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கடந்த 25-ம் தேதி நள்ளிரவில் முட்டுக்காடு பாலம் அருகே வந்தபோது இரண்டு கார்களில் 8 பேர் திடீரென வழிமறித்தனர். அங்கு நிற்காமல் சின்னி திலங்க், தன்னுடைய காரில் கானாத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால், அவரைப் பின்தொடர்ந்து இரண்டு காரில் வந்தவர்கள் சின்னி திலங்க் என்பவரிடம் காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறியிருக்கறார்கள். அதை சின்னி திலங்க் தரப்பு மறுத்திருக்கிறது. அதுதொடர்பான புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.