புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியானதை அடுத்து, இந்திய ரயில்வே சார்பில் காலி ரயில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணச்சீட்டுகள் பெறுவது கட்டாயமாக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று மவுனி அமாவாசை என்பதால், அங்கு நடைபெற்ற ராஜகுளியலில் பங்கேற்க கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நள்ளிரவு 1.00 முதல் 2.00 மணி வரையிலான நேரத்தில் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனினும், இன்று காலை ஐந்து மணிக்கு தொடங்கிய ராஜகுளியலுக்கு முன்பாக நெரிசல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்பட்டு விட்டது. பிறகு அமைதியான சூழல் ஏற்பட்ட நிலையில், வழக்கம்போல் அகாடா துறவிகளின் ராஜகுளியல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பொதுமக்களும் தங்கள் ராஜகுளியலை அகாடாக்கள் முடித்த இடத்தில் துவங்கினார்கள். அதோடு, பொதுமக்களுக்காக திரிவேணி சங்கமத்தின் இதரப் பகுதிகளிலும் ராஜகுளியலுக்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்கள் ராஜகுளியலை முடித்த பக்தர்கள் உடனடியாக வீடு திரும்புவது அவசியமாகிறது. இவர்கள் வீடு திரும்ப தாமதமானால் மேலும், சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், தாங்கள் முன்பதிவு செய்த ரயில்களுக்காக அதன் ரயில் நிலையங்களில் காத்திருப்பதும் நெரிசலுக்கு வழிவகுத்து விடும். இதன் காரணமாக, ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்து அதை தாமதிக்காமல் அமலாக்கவும் துவங்கிவிட்டது.
இந்த அமைச்சக உத்தரவின் பேரில் வட மாநிலங்களில் பல ரயில்கள் பிரயாக்ராஜுக்கு காலியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் உபி உள்ளிட்ட அதன் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இவற்றில் பயணச் சீட்டுகள் பெறுவது கட்டாயமாக்கப்படவில்லை.
இதைப் பற்றி வெளிப்படையாக இலவசப் பயணம் என அறிவிப்பு அளிக்கவில்லை என்றாலும், பயணச் சீட்டுகள் இருக்கின்றதா என சோதனை நடத்த வேண்டாம் என வாய்வழியாக அலுவலர்களுக்கு ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதேசமயம், கூட்ட நெரிசல் காரணமாக பிரயாக்ராஜுக்கான எந்த சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படவில்லை.
ஹெலிகாப்டர்களில் கண்காணிப்பு: இந்நிலையில், உபி காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, வான்வெளியில் ஹெலிகாப்டர்களில் பறந்து நெரிசல் உருவாகும் இடங்கள் கண்டறியப்படுகின்றன. இந்தத் தகவல்களை டிரோன்கள் மூலம் காவல் துறையினர் அறிந்து கொள்கின்றனர்.
உ.பி அரசின் புள்ளிவிவரத்தின்படி இன்று மவுனி அமாவாசைக்காக மதியம் வரை 3.96 கோடி பேர் புனிதக்குளியல் நடத்தி உள்ளனர். இவர்களில் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தின் கரைகளில் கல்பவாசம் செய்யும் சுமார் 10 லட்சம் பேரும் அடங்குவர். ஜனவரி 13 முதல் கணக்கிட்டால் இதுவரை மகா கும்பமேளாவில் 19.98 கோடி பேர் புனிதக்குளியலை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.