புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்தலாக் தடைச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. எனினும், இந்தச் சட்டம் செப்.19, 2028 முதல் செல்லத்தக்கது எனும் வகையில் பின்னோக்கி அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி முத்தலாக் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும், இதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்தச் சட்டத்தை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, “முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனையின் நோக்கம் என்ன?” என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “முத்தலாக் தடை என்பதால், முத்தலாக் குற்றத்துக்குப் பின்பும் கணவன் – மனைவி என்ற உறவு தொடர்கிறது. அப்படியானால், நீங்கள் என்ன செயல்முறையை குற்றமாக்கியுள்ளீர்கள்?” என்று கேட்டார்.
இதனைத் தொடர்ந்து, “2019 சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களின் எண்ணிக்கை அவசியம் தேவை” என்று நீதிமன்றம் கூறியது.
முத்தலாக் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கக் கோரிய மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, விவாகரத்து செய்துவிடுவதாக ஒருவர் தனது மனைவியை மிரட்டினால், அதைக்கூட தண்டிக்க சட்டம் பாடுபட்டதாகக் கூறினார். இதற்கு எதிர் வாதம் முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘குற்றவியல் மிரட்டல்’ என்பது அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலே. இது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506-இன் கீழ் ஒரு குற்றமாகும்” என்றார். இதை மறுத்த, நிஜாம் பாஷா, பிரிவு 506 ஐபிசி ஒரு கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்யுமாறு செய்யும் பயனற்ற அச்சுறுத்தலை குற்றமாகக் கருதவில்லை என்று பதிலளித்தார்.
முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவர்களால் கைவிடப்படுவதை எதிர்க்க இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று சொலிசிட்டர் ஜெனரல் விளக்கினார். “முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்க குறைந்தபட்சம் இது அவசியம். இது ஒரு தடுப்பு நடவடிக்கை. முத்தலாக்கின் விளைவு உடனடியாக, மாற்ற முடியாதது. ஒருவர், தனது மனைவிக்கு ‘தலாக்’ சொல்கிறார் என்றால், அடுத்த நொடியே, அந்த கணவன் – மனைவி உறவு முறிந்துவிடுகிறது. கணவனுடனான வாழ்க்கையிலிருந்தும், வீட்டிலிருந்தும் தூக்கி எறியப்படுகிறாள்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு பேசிய தலைமை நீதிபதி கன்னா, முத்தலாக் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த நடைமுறையை குற்றமாக்குவது சந்தேகங்களை எழுப்பும் என்று குறிப்பிட்டார். மேலும், வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 17-ம் தேதி தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது.