கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மவுலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை ஒருவர், மாணவரை திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணப்பெண் உடையணிந்து காணப்படும் அந்த பேராசிரியை, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை இந்து வங்காள முறைப்படி பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்கிறார். குங்குமம் வைத்தல், மாலை மாற்றுதல் போன்ற சடங்குகளும் நடந்தன. இந்த வீடியோ வைரலானதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி விசாரணை செய்ய 3 பேராசிரியைகளை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை முடியும் வரை பணிக்கு வர வேண்டாம் என கூறி அந்த பெண் பேராசிரியைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவரும் வகுப்புகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இதுபற்றி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தபஸ் சக்ரவர்த்தி கூறும்போது, அந்த பேராசிரியை ஒழுக்கக்கேடான விசயம் எதிலும் ஈடுபடவில்லை. அது முற்றிலும் பாடம் சார்ந்து நடத்தப்பட்ட விசயம் என கூறினார். எனினும், வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், அவரை விடுமுறை எடுத்து கொள்ளும்படி கூறியிருக்கிறோம். இந்த விவகாரம் பற்றி குழு விசாரணை நிறைவடையும் வரை, அந்த மாணவரையும் வகுப்புக்கு வரவேண்டாம் என கூறியிருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.