TVK :'விஜய்யின் சென்டிமென்ட்; புதிய நிர்வாகி சஸ்பென்ஸ்; அலப்பறை கொடுத்த மா.செ' – பனையூர் அப்டேட்ஸ்

தவெக கட்சியின் இரண்டாம் கட்ட மா.செக்கள் கூட்டத்தை நடத்தி மேற்கொண்டு 19 மா.செக்களை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். பனையூரில் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் விஜய் கட்சி மீட்டிங்கின் முக்கிய அப்டேட்ஸ் இங்கே.

TVK

கடந்த 24 ஆம் தேதி முதற்கட்டமாக விஜய் மா.செக்களை சந்தித்த போது கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்தை அவர்களுடன் செலவிட்டார். கொஞ்சம் பொறுமையாகவே அத்தனை பேர் சொல்வதையும் கேட்டு வாழ்த்து சொல்லி ஸ்வீட் கொடுத்து அனுப்பியிருந்தார். ஆனால், இன்று மதியம் 1:50 மணிக்கு பனையூர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர், 3:50 மணிக்குள்ளாகவே கூட்டத்தை முடித்து கிளம்புவதற்கு தயாராகிவிட்டார். முழுதாக 2 மணி நேரத்தை கூட செலவிடவில்லை. நிர்வாகிகளை மொத்தமாக அழைத்து அறிவுரை கூறியிருக்கிறார். ‘இத்தனை வருடங்களாக சேர்ந்து பயணித்தோம். இனியும் சேர்ந்து பயணிப்போம். சேர்ந்தே மக்கள் பணி செய்வோம்.’ என்பது போன்ற உற்சாக வார்த்தைகளை பேசியிருக்கிறார். முடித்துவிட்டு நியமன ஆணைகளை வழங்கி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைப்பெற்றார்.

விஜய் எப்படியோ தெரியவில்லை. ஆனால், ஆனந்த் கடவுள் நம்பிக்கைமிக்கவர். அங்காள பரமேஸ்வரி அம்மன்தான் அவரின் இஷ்டத்தெய்வம். கட்சிரீதியாக எந்த முக்கியமான முடிவென்றாலும் அங்கே சிறப்புப் பூஜையை முடித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். அதனாலயே நிர்வாகிகள் கூட்டத்தையும் ஜோசிய செண்டிமெண்ட்டுகளெல்லாம் பார்த்து நடத்துவதாகவும் சொல்கிறார்கள்.

Vijay

இன்று ‘தை’ அமாவாசை என்பதால்தான் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மதியம் 1:30 மணியோடு இராகுகாலம் முடிந்தது. ஆனந்தும் சரியாக மதியம் 1:30 க்கு நெருக்கமாகத்தான் நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்த சில நிமிடங்களில் அதாவது 1:50 மணிக்கு விஜய் வந்து சேர்ந்தார். அதேமாதிரி, முதற்கட்டமாகவும் 19 மா.செக்களைத்தான் அறிவித்திருந்தார்கள். இன்று இரண்டாம் கட்டமாகவும் 19 மா.செக்களைத்தான் அறிவித்திருக்கிறார்கள். கட்சிக்குள்ளும் 19 அணிகளைத்தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி சுற்றிச் சுற்றி 19 ஆம் எண் வருவதைப் போல செய்வதற்கு பின்னாலும் நியூமராலஜி கணக்குகள் இருப்பதாகவும் பொடி வைக்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

முதற்கட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்த போது அத்தனை மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்தனர். மாவட்டத்துக்கு 15 பேர் மட்டுமே வந்திருந்ததால் கூட்ட நெரிசல் இல்லை. அதனால் விஜய் பனையூர் அலுவலகத்துக்கு வந்து செல்வதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று நியமன ஆணை பெறவிருந்த சில மா.செக்கள் தங்களின் வெயிட்டை காட்ட வேண்டும் என்பதற்காக ஆதரவாளர்கள் கூட்டத்தை அலுவலகத்துக்கு வெளியே திரட்டி நிற்க வைத்திருந்தனர்.

TVK

இதனால் விஜய் அலுவலகத்துக்குள் செல்லும்போதும் கடும் நெரிசல் ஏற்பட்டது. தடபுடவென அத்தனை தொண்டர்களும் உள்ளே புகுந்துவிட்டார்கள். அவர்களை வெளியே அனுப்பி கூட்டத்தைத் தொடங்குவதற்கு படாதபாடு பட்டுவிட்டார்கள். அதேமாதிரி அலுவலகத்திலிருந்து வெளியேறுகையிலும் விஜய்யின் கார் மூச்சுத் திணறியபடியேதான் வெளியேறியது. குறிப்பாக, சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் தொகுதியை உள்ளடக்கி சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஈ.சி.ஆர்.சரவணன் அலப்பறையை கூட்டிவிட்டார்.

பேண்ட் வாத்தியம், பண மழை, வீர வாள், குத்தாட்டம் போடும் கூட்டம் என அத்தனையையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார். நியமன ஆணையை வாங்கிவிட்டு அந்த பனையூர் அலுவலகத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரைக்கும் காரின் மேற்கூரையை திறந்துவிட்டு கும்பிட்டப்படி ஊர்வலமாக வந்தார். குறிப்பிட்ட தூரங்களில் பாய்ண்ட் அமைத்து புல்டோசர்களை கொண்டு மலர் தூவும் ஏற்பாடுகளையும் அவரின் ஆதரவாளர்கள் செய்திருந்தார்.

ECR Saravanan

இதனால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலாக இருக்கும் அந்த சாலை இன்னும் நெரிசலாகி வாகன ஓட்டிகளுக்கு இடையூறானது. ‘இப்போவே இப்படி பண்றாங்களே…’ என மக்கள் அலுப்பான குரலில் அதிருப்தியை வெளிக்காட்டியதையும் பார்க்க முடிந்தது.

பொறுப்பு கிடைத்தவர்களில் சிலர் இப்படி அலப்பறைக் கொடுக்க, எதிர்பார்த்த பொறுப்புக் கிடைக்காதவர்கள் பனையூர் அலுவலகத்துக்கு வெளியே ஆதங்கத்தோடு புலம்பி திரிந்ததையும் பார்க்க முடிந்தது.

Vijay

கிட்டத்தட்ட 4 மணிவாக்கில் விஜய் பனையூரை விட்டு வெளியேறினார். பனையூரிலிருந்து நேராக நீலாங்கரை இல்லத்துக்கு செல்லாமல் பட்டினப்பாக்கத்திலுள்ள வீட்டிற்கு சென்றிருக்கிறார் விஜய். அங்கேதான் அந்த பரபர அரசியல் புள்ளிக்கும் விஜய்க்கும் சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள். வெகு விரைவிலேயே அந்த முக்கியப்புள்ளியின் இணைப்புப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

TVK

பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சி இரண்டாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில் அதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் பரபரக்க தொடங்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.