மதுரை: புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது ஊடகங்களை அனுமதிக்கவும், செல்போனில் படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச் சேர்ந்த மரியம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “என் கணவர் ஜகபர் அலி. சுற்றுச்சூழல் ஆர்வலர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தார். சட்டவிரோத குவாரிகளால் அரசுக்கு ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டதையும் வெளியே கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி காட்டுபாபா மசூதியில் இருந்து தொழுகையை முடித்து வீடு திரும்பியவர் மீது டிப்பர் லாரியை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். என் கணவர் விபத்தில் இறந்தது போல் காட்டப்பட்டுள்ளது. என் கணவர் முன்கூட்டியே திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் கணவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குவாரி நடத்தி வந்தவர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இவை தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து என் கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவரின் உடல் ஜன.18-ம் தேதி மாலை 4 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் போதிய தடய அறிவியல் நிபுணர்களும், உடலை பாதுகாக்க குளிர்பதன சவக் கிடங்கும் இல்லை. மேலும், என் கணவரின் உடல் தடய அறிவியல் விதிகளை பின்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. எலும்பு முறிவுகள் தொடர்பாக எக்ஸ்ரே எதுவும் எடுக்கப்படவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டல்படி பிரேத பரிசோதனை ஆய்வு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
பிரேத பரிசோதனை தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்துக்குப் பிறகு பிரேத பரிசோதனை சான்றிதழ் வழங்கினர். இது தொடர்பாக தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசித்த போது முதலில் நடைபெற்ற பிரேத பரிசோதனை உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டாலும் முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கவில்லை. விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
விசாரணை சரியான பாதையில் செல்லுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே என் கணவர் உடலை தோண்டி எடுத்து, பேராசிரியர் தகுதிக்கு குறையாத இரண்டு தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் எங்கள் தரப்பில் ஒரு தடய அறிவியல் நிபுணர் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுக்கவும், மறு பிரேத பரிசோதனை நடத்தவும், அதை வீடியோ பதிவு செய்யவும், பிரேத பரிசோதனை நடந்த அன்றே சான்றிதழ் மற்றும் வீடியோ பதிவு நகல் வழங்கவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில், பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் நேரில் ஆஜராகி, “மனுதாரரின் கணவர் இறப்புக்கு லாரி ஏறியதால் ஏற்பட்ட எலும்பு முறிவுகளும், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயமே காரணம்” என்றார். இதையடுத்து நீதிபதி, “லாரி ஏறி இறங்கியதில் ஏற்பட்ட எலும்பு முறிவும் காயமுமே இறப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது உடலை தோண்டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? இதை அரசியலுக்காகவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தலாம்” என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், “இறந்தவரின் உடலை முறையான குளிர்பதன வசதி கூட இல்லாத மருத்துவமனையில் வைத்திருந்துள்ளனர். ஆகவே ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுப்பது வழக்கில் கூடுதல் ஆவணங்களாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், “வழக்குப் பதிவுச் செய்ய காலதாமதம் செய்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடும்ப நபர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஜகபர் அலி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்து பார்க்கலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, “ஜகபர் அலி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது உடலை எக்ஸ்ரே எடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் எக்ஸ்ரே எடுப்பதற்கான மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் நியமிக்க வேண்டும். திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில், போதிய போலீஸ் பாதுகாப்புடன், ஜகபர் அலி உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும். முன்னதாக, உடல் புதைக்கப்பட்ட இடத்தை வெளியே இருந்து யாரும் பார்க்க முடியாதபடி மறைக்க வேண்டும்.
எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில் ஊடகங்களை அனுமதிக்கக் கூடாது. செல்போனில் புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்க கூடாது. உடல் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்படுவது தொடர்பான எந்த புகைப்படமும் விசாரணை தவிர்த்து வேறு இடங்களில் பகிரக்கூடாது.எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும்,” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.