தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜுமா. இவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பதவியில் இருந்து விலகும்படி அவருக்கு அழுத்தம் தரப்பட்டது.

2021-ம் ஆண்டு ஊழல் விசாரணைக்கு ஆஜராகும்படி ஜேக்கப்புக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்ததும், கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனால், அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். கடைகளை சூறையாடினர். கட்டிடங்கள், வீடுகளுக்கு தீ வைத்து சொத்துகளை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, ஜேக்கப்பின் மகள் டுடுஜைல் ஜுமா-சம்புத்லா டுவிட்டரில் (தற்போது எக்ஸ் வலைதளம்) வன்முறையாளர்களை தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

நாடு முழுவதும் பரவிய வன்முறையின்போது, அதனை ஊக்குவிக்கும் வகையில், இன்னும் கூடுதலாக சேதம் ஏற்படுத்தும்படி, போராட்டக்காரர்களை சம்புத்லா தூண்டி விட்டார் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஜேக்கப்புக்கும் சிரில் ரமபோசாவுக்கும் இடையே அரசியல் மோதல் போக்கு நிலவியது. ஜேக்கப்புக்கு பதிலாக ரமபோசா நாட்டின் அதிபரானார். ஜேக்கப் கட்சியை வீட்டு நீக்கப்பட்டதும், எம்.கே. என்ற புதிய கட்சியை தொடங்கினார். சம்புத்லா அக்கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.

இந்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகளான சம்புத்லா, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் போலீசிடம் தானாகவே சென்று தன்னை ஒப்படைத்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.

சம்புத்லா, டர்பன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனை தொடர்ந்து நகரில் போலீசார் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.